“ராதிகா மேடம் சீனைப் பார்த்து அழுதே விட்டேன்!” – ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றியில் நெகிழ்ந்த ஜி.வி. பிரகாஷ்!
சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னை நகரில் ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரத்யேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் :
விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “இந்தப் படத்திற்கு இசையமைக்கும் நல்வாய்ப்பை வழங்கி ஆதரவளித்த தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தொடர்ந்து வெங்கியுடன் இணைந்து மூன்றாவது முறையாகப் பணியாற்றி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றிருக்கிறேன். ‘வாத்தி’ படத்தின் பாடல்கள் தேசிய விருதை ஈட்டித் தந்ததோடு, தெலுங்குத் திரையுலகில் எனக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிட்டது. சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தபோது அனைவரும் இப்படத்தின் இசையைப் பாராட்டியதுதான் எனக்குக் கிடைத்த அசல் வெற்றி.
ஆந்திரா முதல் வெளிநாடுகள் வரை அனைத்து இடங்களிலும் இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. சூர்யா சாருக்கு இது மிகவும் முக்கியமான ஆண்டு. ‘சூரரை போற்று’ வெற்றிக்குப் பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றிருப்பது மகிழ்ச்சி; எங்கள் கூட்டணியும் நிச்சயம் ஹாட்ரிக் அடிக்கும்!
படப்பிடிப்பில் ராதிகா மேடத்திடம் நானும் அடி வாங்கியிருக்கிறேன். சூர்யாவைப் போலவே ராதிகா மேடத்திற்கும் இது பொற்காலம்; ‘தாய்க்கிழவி’ வெற்றியைத் தொடர்ந்து இப்படத்திலும் தூள் கிளப்பியிருக்கிறார். இப்படத்தில் அவர் நடித்த உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்குப் பின்னணி இசையமைத்தபோது, என்னையும் அறியாமல் நான் அழுதே விட்டேன்.
இறுதிக்கட்டத்தில் வெறும் மூன்றே நாட்களில் நாங்கள் உருவாக்கிய இரண்டு பாடல்கள் தான் இன்று உலகமெங்கும் காட்டுத்தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இசையில் எப்போது மேஜிக் நிகழும் எனச் சொல்ல முடியாது. படம் வெளியாகி இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனம் கூட வரவில்லை என்பது மிக அரிதான, மாபெரும் சிறப்பம்சம்” என மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால்: 2003-ல் ‘கஜினி’ நேர்காணலின் போது, 5 நிமிடம் தாமதமானதற்குக் கூட வருத்தம் தெரிவித்த சூர்யாவின் அந்த உயரிய மனிதநேயமே அவரை மக்கள் மனதில் உயர்த்தியிருக்கிறது. வெங்கி தனது கலையை (Art) மட்டுமல்லாமல், தன் இதயத்தை (Heart) இதில் கொட்டியிருக்கிறார்.
-
நடிகை பவானி ஸ்ரீ: ‘மேக்னா’ கதாபாத்திரத்தை அளித்த இயக்குநருக்கு நன்றி. சூர்யா சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்; ராதிகா மேடமும் மமீதா பைஜூவும் படத்தின் மாபெரும் தூண்கள்.
-
நடிகை ராதிகா சரத்குமார்: ‘சூரியவம்சம்’ படத்திற்குப் பிறகு நான் மிகவும் ரசித்துப்பார்த்த குடும்பத் திரைப்படம் இது. வழக்கமாகப் படங்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் சரத்குமார் சார் கூட, இப்படத்தைப் பார்த்துவிட்டு ‘ஐ லவ் திஸ் மூவி’ எனப் பாராட்டினார்.
-
இயக்குநர் வெங்கி அட்லூரி: பத்திரிகையாளர் காட்சியின் போது பயத்தில் என் கால்கள் நடுங்கின; ஆனால் படம் முடிந்ததும் அனைவரின் பாராட்டும் கட்டி அணைப்பும் என்னை நெகிழ வைத்தது. ஜி.வி. பிரகாஷ் எனது சொந்தச் சகோதரர் போன்றவர். சூர்யாவின் கதையைத் தேர்ந்தெடுக்கும் துணிச்சலே 150 கோடி ரூபாய் வசூல் சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது.
கலக்கலான குடும்ப உணர்வுகளாலும், மனதை அள்ளும் இசையாலும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ குடும்பங்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

