‘அமரம்’: மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை! ‘பருத்திவீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ வரிசையில் ஒரு கல்ட் கிளாசிக்!
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் C.R.ராஜன் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. தேஜஸ் ராஜன், ஐரா அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 அன்று திரைக்கு வருகிறது.
எல்லை தாண்டிய உழைப்பில் உருவான காதல் காவியம்!
மூன்று காலகட்டங்களில், மூன்று வெவ்வேறான நிலப்பரப்புகளில் நடக்கும் ஒரு அழுத்தமான காதல் கதையாக ‘அமரம்’ செதுக்கப்பட்டுள்ளது. புயலுக்கு நடுவே கொடைக்கானலின் உறைபனி அதிகாலை, எண்ணூர் கடற்கரையின் சவாலான சூழல் என 40 நாட்களுக்கும் மேலாக படக்குழுவினர் தங்களின் இரத்தமும் சதையுமாக உழைத்துள்ளனர். 330-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் தங்களின் பங்களிப்பைத் தந்துள்ளனர்.
விழாவில் ஒலித்த குரல்கள்:
-
தயாரிப்பாளர் C.R. ராஜன்: “பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், கதையின் மீது கொண்ட காதலால் மட்டுமே அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும் உழைத்துள்ளனர். கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே எனக்குப் பிடித்துவிட்டது. மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படைப்பிற்கு எல்லாரும் ஆதரவு தர வேண்டும்.”
-
நாயகன் தேஜஸ் ராஜன்: “இது எங்களுக்கு மிக முக்கியமான நாள். கடுமையான இயற்கைச் சூழல்களுக்கு இடையே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.”
-
நாயகி ஐரா அகர்வால்: “இயக்குநர் அருள் கிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியிலும் என்னைச் செதுக்கியுள்ளார். படக்குழுவின் கூட்டு உழைப்பு டிரெய்லரிலேயே தெரிகிறது.”
-
சிறப்பு விருந்தினர் டாக்டர் V. ராமராஜ்: “வணிகப் படமாக இல்லாமல், எளிய மக்களின் வலிகளையும் அவர்களுக்கான நீதியையும் பேசும் கதைகளைத் திரைக்களத்திற்கு கொண்டு வர தனித் தைரியம் வேண்டும். அந்த வகையில் ‘அமரம்’ குழுவிற்கு என் வாழ்த்துகள்.”
இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசியதிலிருந்து…
“என் ஊரிலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான்தான். கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களைப் பார்த்துத்தான் திரையுலகிற்குள் வந்தேன். ‘கே.ஜி.எஃப்’ போன்ற பிரம்மாண்டமான ஆக்ஷன் கதையைச் செய்ய நினைத்து, சில சூழல்களால் அது தள்ளிப்போனது.
இருப்பினும், பெரிய நட்சத்திரங்களுக்காக எழுதப்பட்ட கதையைக் கூட, குறைந்த பட்ஜெட்டில் துல்லியமான திட்டமிடலோடு ஒரு புதுமுகத்தை வைத்து பிரம்மாண்டமாக மாற்ற முடியும் என்பதற்கு இந்தப் படமே சாட்சி! ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் சார் இந்தப் படத்தைப் பார்த்தவிட்டு, ‘இது புதிய பாதை, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன் போல ஒரு கல்ட் கிளாசிக் படமாக அமையும்’ என்று வாழ்த்தியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இது சமூகத்தால் மறுக்கப்பட்ட மக்களின் உண்மையான வாழ்க்கையைப் பேசும் கதை.”
மிக்கி ஜெ. மேயரின் இசை, ‘வடசென்னை’ புகழ் ஸ்ரீராமரின் எடிட்டிங், பரத் குமாரின் ஒளிப்பதிவு என வலுவான தொழில்நுட்பக் குழுவோடு களம் இறங்கும் ‘அமரம்’, ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளில் புயலைக் கிளப்பத் தயாராக உள்ளது!

