“சினிமா வாய்ப்பு கிடைத்திராவிட்டால் என்ன செய்திருப்பேன்!”: கெத்ஆக பதில் சொல் சொன்ன விக்ரம்!
விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5ஆம் தேதி) சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் நாயகன் விக்ரம் பேசுகையில், ” நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவரை முதல் மூன்று ரேங்குகளில் இருந்த நான் அதன் பின்னர் கடைசி மூன்று ரேங்குகள் எடுத்தேன். கல்லூரி வந்த பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் எனக்கு மேலும் அதிகரித்தது. ஐஐடி-யில் பிளாக் காமெடி என்ற நாடகத்தில் நாயகனாக நடித்தேன். அதற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது அளித்தார்கள். ஆனால் அன்றைய தினமே விபத்தில் காலை முறித்துக் கொண்டேன். காலையே வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். 23 ஆப்ரேஷன்கள் செய்தார்கள். அதன் பிறகு ஊன்று கோல் வைத்து நடக்க ஆரம்பித்தேன்.
மருத்துவரிடம் எனது அம்மா கேட்டபோது என்னால் நடக்கவே முடியாது எனச் சொன்னார்கள். ஆனால் நான் எனது அம்மாவிடம் நான் கட்டாயம் நடப்பேன் எனக் கூறினேன். பத்து ஆண்டுகள் எனது வாழ்க்கை பின்னால் சென்றது. வீட்டிற்கு வருமானம் இல்லாததால், ஊன்றுகோலைக் கொண்டே வேலைக்குப் போவேன். ஊன்று கோலை தவிர்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். எனது அம்மா வேலைக்குப் போகவேண்டாம் எனக் கூறுவார். நான் நடிக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டே இருப்பேன்.
சினிமா வாய்ப்புகள் வந்த பின்னர் படம் எதுவும் ஓடவில்லை. இதில் 10 வருடங்கள் போனது. இதனால் எனது நண்பர்களும் சினிமாவை விட்டுவிடச் சொன்னார்கள். அன்றைக்கு சினிமாவை விட்டிருந்தால், இன்றைக்கு நான் உங்கள் முன் பேசிக்கொண்டு இருக்க மாட்டேன். ஒரு கனவை நோக்கி நமது சிந்தனை இருந்தால் நம்மால் நிச்சயம் அதை அடைய முடியும். நான் சில நேரங்களில் எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன், ஒருவேளை சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்திருப்பாய் என!
‘ இப்போதும் முயற்சி செய்திருப்பேன்’ என்பதே எனது பதிலாக இருக்கும்.
ஏனென்றால் நான் சினிமாவை அவ்வளவு நேசிக்கின்றேன். நான் அவ்வளவு நேசித்த சினிமா எனக்கு கொடுத்த அன்பளிப்புதான் நீங்கள் (ரசிகர்கள்). இந்த படம் குறித்து மற்ற மாநிலங்களில் மிகவும் ஆர்வமாக கேட்கின்றனர். அதை ஏற்படுத்தியவர் ரஞ்சித். இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தொடர்ந்து நாம் படங்கள் செய்யலாம். ரஞ்சித் உங்கள் பேச்சுக்கு ஒரு வலிமை இருக்கின்றது. அதனை எப்போதும்
சரியாகவே கையாளுங்கள்” என விக்ரம் பேசினார்.
