“தியாகராஜன் மிரட்டலான இயக்குநர்!” : ‘அந்தகன்’ விழாவில் கே.எஸ்.ரவிக்குமார்
தியாகரஜான் இயக்கத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கும், ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வரும் 9ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.
படத்தின் சிறப்பு முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், “இப்படத்தின் படப்பிடிப்பு ஜாலியான அனுபவம். அதே நேரம் தியாகராஜன் கண்டிப்பான இயக்குநர். படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்துவிட்டால், மகனாக இருந்தாலும் பிரசாந்த் அமைதி ஆகிவிடுவார். அவருடைய மனதில் பயபக்தி வந்துவிடும். இப்போதெல்லாம் யாரும் இயக்குநரைப் பார்த்து பயப்படுவதில்லை. இயக்குநர்கள் தான் பயப்படுகிறார்கள். ,” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார், ”அனைவரிடத்திலும் தியாகராஜன், பிரசாந்த் இருவரும் மிகுந்த அன்பை காட்டினர். பிரசாந்த் மீது அன்பு செலுத்தாதவர்கள் யாரும் இல்லை” என்றார்.
நடிகை பிரியா ஆனந்த், ”இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் இயக்குநர் தியாகராஜனை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் அவர்களது வீட்டில் இருவர் இருக்கிறார்கள். பிரீத்தி மற்றும் பிரசாந்தின் அம்மா. இவர்கள் இருவரும் இப்படி இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்” என்றார்.
நடிகை சிம்ரன், ”பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் தியாகராஜன், ”இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்” என்றார்.
நடிகர் பிரசாந்த், ”’அந்தகன்’ அருமையான படைப்பு. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது” என்றார்.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று ‘அந்தகன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

