விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பு.. தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!
விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!
தீபாவளித் திருநாளை வெறும் பட்டாசுகளின் ஒளியாக மட்டும் பார்க்காமல், பாமர மக்களின் முகங்களில் உண்மையான மகிழ்ச்சியைப் பற்றவைக்கும் பேரொளியாக மாற்றி காட்டியுள்ளார் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி! தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் அமைந்துள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில், கடந்த நவம்பர் 1, 2026 அன்று அரங்கேறிய அந்த மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழாதான் இப்போது தமிழகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
துளி அறக்கட்டளை (Thuli Trust) முன்னெடுத்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுக்கு, நடிகர் விஜய் சேதுபதியுடன் திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் தோளோடு தோள் நின்று கரம் கோர்த்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்புச் சேவை இயக்கம், நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை என அத்தனை அமைப்புகளும் இணைந்து களமிறங்கிய வேகம் இருக்கிறதே, அது விழாவை ஒரு மக்கள் திருவிழாவாகவே மாற்றிவிட்டது!
பண்டிகைக் கொண்டாட்டங்கள் வெறும் வசதி படைத்தவர்களின் வீடுகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதை உணர்த்தும் விதமாக, பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த 200 முதியோர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்குப் புத்தாடைகளும் அத்தியாவசிய நலத்திட்ட உதவிகளும் வாரி வழங்கப்பட்டன. அந்தப் பெரியவர்களின் சுருங்கிய முகங்களில் மலர்ந்த புன்னகையும், குழந்தைகளின் கண்களில் மின்னிய தீபாவளிப் பட்டாசு வெளிச்சமும் அங்கிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சையும் நெகிழச் செய்தது.
மகிழ்ச்சியைப் பரிமாறுவதுடன் நில்லாமல், மக்களின் உடல்நலனிலும் முழு அக்கறை செலுத்தியதுதான் இந்த முன்னெடுப்பின் உச்சக்கட்ட சிறப்பு. ஆய்க்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரண்டு வந்த பொதுமக்களுக்காகப் பிரம்மாண்ட மருத்துவ முகாமே நடத்தப்பட்டது. அங்கு வந்திருந்த மக்களுக்கு அடிப்படை உடல்நலப் பரிசோதனைகள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனைகள், ஈசிஜி (ECG) பரிசோதனை மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனைகள் என அனைத்துமே அரவணைப்போடு வழங்கப்பட்டன. நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் விதைத்ததில் இந்த முகாம் முழு வெற்றி பெற்றுள்ளது.
“தங்களுக்குள் மட்டும் கொண்டாடுவதல்ல கொண்டாட்டம்; விளிம்பு நிலை மக்களுடன் பகிர்ந்து கொள்வதே உண்மையான மனிதநேயம்” என்பதை விஜய் சேதுபதியும் அவரது நட்பு வட்டாரமும் இந்தத் தீபாவளியில் செய்து காட்டியுள்ளன. பல அமைப்புகள் கை கோர்த்தால் அடிமட்ட மக்களின் வாழ்க்கையிலும் நம்பிக்கையின் விடியலை உருவாக்க முடியும் என்பதற்குச் சாட்சியாக நின்ற இந்த விழாவைத் தங்களின் சொந்த விழாவாகக் கொண்டாடிய முதியோர்களும் பொதுமக்களும், தங்களது உள்ளம் கனிந்த நன்றியை நடிகர் விஜய் சேதுபதிக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் கண்ணீ மல் நீட்டியுள்ளனர்!

