அர்ஜூனின் அதிரவைக்கும் ‘வீராவி’ லுக்! 4 மொழிகளில் மிரட்ட வரும் ‘பொலிமேரா 3’!
தெலுங்கு திரையுலகில் முதல் இரண்டு பாகங்கள் மூலமாக அமானுஷ்ய த்ரில்லர்களில் புதிய உச்சத்தைத் தொட்ட ‘பொலிமேரா’ வரிசையின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பொலிமேரா 3’ திரைப்படத்தில், இதுவரை இராத முற்றிலும் மாறுபட்ட ‘வீராவி’ என்ற கம்பீரமான பாத்திரத்தில் அர்ஜூன் களம் இறங்கியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ், திரை ரசிகர்களின் மத்தியில் காட்டுத்தீ போல பரவி பலத்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
மர்ம உலகிற்குள் கம்பீர என்ட்ரி
இருள் சூழ்ந்த பழமையான கோயில், அமாவாசை இரவின் மர்மமான பின்னணி, மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் அனந்த பத்மநாப சுவாமியின் ஆன்மிகத் தரிசனங்களோடு மிக அடர்த்தியான சூழலில் இந்த க்ளிம்ப்ஸ் தொடங்குகிறது. சத்யம் ராஜேஷ் (கொமறையா) செய்யும் மாந்திரீகச் சடங்குகள் ஒருபுறம் பதற்றத்தை எகிற வைக்க, அதையெல்லாம் மீறி திரையை ஆக்கிரமிக்கிறது அர்ஜூனின் பிரம்மாண்ட அறிமுகம்.
கையில் மின்னும் வாள், அனல் பறக்கும் கூர்மையான பார்வை, கட்டுக்கோப்பான உடல்மொழியோடு ‘வீராவி’யாக அர்ஜூன் தோன்றும் ஒவ்வொரு நொடியும் மாஸான திரை விருந்தாக அமைந்திருக்கிறது. நாற்பதாண்டுகளாக ஆக்ஷன் அவதாரங்களில் ரசிகர்களைக் கட்டிப்போட்ட அர்ஜூன், இந்த மாந்திரீக-அமானுஷ்ய களத்தில் ‘வீராவி’யாக களமிறங்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கூட்டணி & தயாரிப்புப் பின்னணி
இயக்குநர் டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தை, வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக வெற்றிப் தயாரிப்பாளர் வம்சி நந்திபாடியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி (ஏசியன் குழுமம்) சார்பில் பரத் நரங்கும் இணைந்து தயாரிக்கின்றனர்.
காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த்தின் ஒளிப்பதிவும், கிருஷ்ண பிரசாத்தின் பின்னணி இசையும் இந்த அமானுஷ்ய உலகத்தை மேலும் திரில்லாக மாற்றியுள்ளன.
‘பொலிமேரா 3’ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனின் இந்த ‘வீராவி’ அவதாரம் திரையரங்குகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உருவாக்கப்போவது உறுதி.

