பாசப் பிள்ளைகளின் தேசிய கீதம்.. ‘அப்பாவப் போல..’ ! மு.மாறன் + விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘அப்பா குட்டி’ படத்தின் நெகிழ்ச்சிப் பாடல்!

பாசப் பிள்ளைகளின் தேசிய கீதம்..  ‘அப்பாவப் போல..’ ! மு.மாறன் + விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘அப்பா குட்டி’ படத்தின் நெகிழ்ச்சிப் பாடல்!

க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது திரைப்படம் ‘அப்பா குட்டி’. அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம்.

இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.  குறுகிய காலத்திலேயே 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஏகாதேசி வரிகளில், விஜய் ஆண்டனி இசையில், மீனாட்சி இளையராஜா தனது உணர்வுபூர்வமான குரலால் உயிரூட்டியுள்ளார்.

இப்பாடல் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆழமான பாசப் பிணைப்பையும், தந்தை செய்யும் தியாகங்களையும் மனதைத் தொடும் விதமாக எடுத்துரைக்கிறது.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் ப்ரீத்தி அஸ்ராணி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா மற்றும் பகவதி பெருமாள், ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் கவனித்துள்ள இப்படத்திற்கு, ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் ஆடியோ உரிமையையும், 5 ஸ்டார் செந்தில் திரையரங்க வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ள நிலையில், மீரா விஜய் ஆண்டனி இப்படத்தை வழங்குகிறார்.

தந்தை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளதோடு, குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் இணைக்கும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

Related Posts