ராமாயணா: விமர்சனம்
நிதிஷ் திவாரி இயக்கத்தில், நமீத் மல்கோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இராமாயணம்’ முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆரம்ப கட்ட டீசர், டிரைலர்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, திரையில் ஒரு புதிய காவிய அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம்.
படம் ஆரம்பித்த உடனே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையிலான போர் வெடிக்கிறது. அதில் தோற்றுப்போகும் ராவணனின் தாய் ஷோபனா, தன் மகனை உசுப்பேற்றி விட, ராவணன் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் மனிதர்களைத் தவிர வேறு யாராலும் மரணம் நேரக் கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான்.
தேவர்களை ஆட்டிப்படைத்து இலங்கையின் பேரரசனாக மாறும் ராவணனை அழிக்க, விஷ்ணு மனித உருவில் ராமராக அவதரிக்கிறார். கைகேயிக்கு தசரதன் கொடுத்த வாக்கிற்காக முடிசூடாமல் வனவாசம் செல்லும் ராமன், லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் சீதையைக் கடத்திச் செல்லும் ராவணனைப் பழிவாங்க சபதம் எடுப்பது வரையிலான நிகழ்வுகள் தான் இந்த முதல் பாகத்தின் முதன்மை கதைக்களம்.
பிளஸ்
விஷுவல் எஃபெக்ட்ஸ் & கேமரா ஒர்க்: ஹாலிவுட் மற்றும் ‘அவதார்’ படங்களுக்கே சவால் விடும் வகையில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளைப் பிசிறு தட்டாமல் செதுக்கியுள்ளனர். 3டி தொழில்நுப்டம் படத்திற்குப் பெரும் பலம்.
-
நடிப்பு:
-
ராவணனாக வரும் யஷ் தான் படத்தின் நிஜமான ‘ஷோ ஸ்டீலர்’. பத்து தலை ராவணனாக அவர் தோன்றும் காட்சிகள் திரையரங்கில் மாஸ் காட்டுகின்றன.
-
ஆரம்பத்தில் ஒட்டாமல் தெரிந்தாலும், போகப் போக ராமராகவே மாறி மெய்சிலிர்க்க வைக்கிறார் ரன்பீர் கபூர்.
-
சீதையாக சாய் பல்லவி கச்சிதமான தேர்வாக பொருந்துகிறார். மண்டோதரியாக காஜல் அகர்வால் மற்றும் சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் அசத்தியுள்ளனர்.
-
-
கிளைமேக்ஸ் காட்சி: ஜடாயு சண்டைக் காட்சி திரையில் ஒரு மாபெரும் காட்சி விருந்தாக அமைந்துள்ளது.
-
டப்பிங் & வசனங்கள்: தூய தமிழில் அமைந்த வசனங்களும், கச்சிதமான லிப் சின்க் அமைப்பும் டப்பிங் படம் என்ற உணர்வையே தரவில்லை.
-
போஸ்ட் கிரெடிட்: அடுத்த பாகத்திற்கான அனுமன் என்ட்ரியை போஸ்ட் கிரெடிட் காட்சியாக வைத்திருப்பது சிறப்பு.
மைனஸ்
-
சீரியல் போன்ற உணர்வு: முதல் பாதியில் இலங்கைப் பகுதிகளில் இருந்த வேகம், அயோத்திக்குக் கதையைக் கொண்டு வரும் போது சற்றே மந்தமாகி இந்தி சீரியலைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
-
நகைச்சுவை & சுயம்வரம்: சுயம்வரக் காட்சிகளில் வைக்கப்பட்ட நகைச்சுவைகள் பெரிதாகச் சிரிப்பை வரவழைக்கவில்லை.
-
இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களும் ஹான்ஸ் ஜிம்மரின் பின்னணி இசையும் ஓரளவுக்குப் பலம் சேர்த்தாலும், இவ்வளவு பிரம்மாண்டமான கதைக்களத்திற்கு இன்னமும் வலுவாக இருந்திருக்கலாம்.
நிறைவாக…
ஆதிபுருஷ் படத்துடன் ஒப்பிடும்போது பல மடங்கு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஹாலிவுட் கொண்டாடிய ‘ஒடிசி’ போன்ற படங்களுக்கு இணையான ஒரு அனுபவத்தைத் தருகிறது. முதல் பாதியில் வரும் சிறிய மெதுவான நகர்வைப் பொறுத்துக் கொண்டால், திரையரங்கில் 3டியில் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டிய ஒரு பிரம்மாண்ட காவியம் இந்த ‘இராமாயணம்’.

