நாகார்ஜுனாவின் ‘கிங் 100’: அசோக் செல்வனின் மாஸ் அவதாரம்!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக, அவரது 100-வது திரைப்படமாக உருவாகி வருகிறது ‘கிங் 100’. ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ர.கார்த்திக் தனது மூன்றாவது படைப்பாக இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்குகிறார். நாகார்ஜுனா, தபு, அசோக் செல்வன் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ஆரம்பம் முதலே திரையுலகிலும் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டி வருகிறது.
இந்த நிலையில், படத்தில் ‘கர்ணா’ என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்குச் சிறப்பான விருந்தளித்துள்ளனர். இதுவரை கண்டிராத முற்றிலும் புதிய, மிரட்டலான அவதாரத்தில் அசோக் செல்வன் இந்த போஸ்டரில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஸ்டைலான மெரூன் நிறச் சட்டை, நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடியுடன் ஒரு நாற்காலியில் மிகவும் கம்பீரமாகவும் அதேநேரம் மாஸாகவும் அமர்ந்திருக்கிறார் கர்ணா. கையில் புகையும் சிகரெட், அருகில் அலட்சியமாகப் போடப்பட்டிருக்கும் காக்கி நிறக் காவல் துறை சீருடை, அத்துடன் முன்புறத்தில் சதுரங்கப் பலகையின் ‘கிங்’ காய் எனப் போஸ்டர் முழுக்க சுவாரசியமான பல குறியீடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இருண்ட பின்னணியும் புகை மூட்டமான சூழலும் படத்திற்குள் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு மர்மமான ஆட்டத்தைச் சுட்டிக்காட்டி, கதையின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசை, ராஜா மகாதேவனின் ஒளிப்பதிவு, நவீன் நூலியின் கூர்மையான படத்தொகுப்பு மற்றும் N. சதீஷ்குமாரின் கலை இயக்கம் எனப் பலமான தொழில்நுட்பக் கூட்டணியுடன், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கிங் 100’ திரைப்படம் வரும் டிசம்பர் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

