‘வேலிமுட்டி’ மிஷ்கின் அவர்களுக்கு ஓர் வலியுறுத்தல்!

‘வேலிமுட்டி’ மிஷ்கின் அவர்களுக்கு ஓர் வலியுறுத்தல்!

மூத்தவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

சாராயம் போல அந்தக் காலத்தில் கசாயம் என்கிற போதை திரவம் உண்டாம். பிரவுன் வண்ணத்தில் இருக்கும் அதை, ‘வேலி முட்டி’ என்று செல்லமாக அழைப்பார்களாம்.

அதாவது, இந்த போதை மருந்தை உட்கொண்டவர்கள் சாலையில் அங்குமிங்கும் குறுக்கு நெடுக்காக தள்ளாடி நடப்பார்கள். அந்தக் காலத்தில் ஆள் நடமாட்டமும், மாட்டு வண்டிகளும்தானே…

இந்த போதையாளர்களைப் பார்த்து ஆட்கள் தெறித்து ஓடுவார்கள்.. வண்டிக்காரர்கள் பதறிப்போய் மாட்டை இழுத்து நிறுத்துவார்கள்… ஒரே களேபாரம்தான்…

ஆனால் இந்த போதையாளர்கள், சாலை ஓரத்துக்குச் சென்றுவிட்டால் அப்படியே பேலன்ஸ் செய்து சிலை போல நின்று விடுவார்களாம்… காரணம், அப்போதெல்லாம் சாலை ஓரங்களில முள் வேலிகள் இருக்குமே… அதில் மோதினால் உடம்பு புண்ணாகிவிடுமே…!

ஆகவே, வேலியை முட்டும் அளவுக்குப் போனவர்கள், சுதாரித்து மீண்டும் சாலையில் அலைக்கழிந்து இன்னொரு பக்க வேலி வரை வருவார்கள்.. ஆனால் அங்கும் சரியாக ஸ்டெடி செய்து நின்று விடுவார்கள்.

இப்படி இருபக்கமும் வேலியை முட்டுவது போல சென்று – நின்று – திரும்புவார்கள்.

அதனால்தான், கசாயம் என்கிற அந்த போதை வஸ்துவுக்கு “வேலி முட்டி” என்று செல்லப்பெயராம்.

திரைப்பட இயக்குநர் மிஷ்கின், மேடையில் பேசினால் தன்னை மறந்துவிடுவார். அவரது பேச்சு இங்கும் அங்கும் அலைபாயும்…

அதே போல, தன்னிடம் பணியாற்றும் பெண் உதவி இயக்குநர்கள் மற்றும் நடிகைகளை “அவள் இவள் – போடி, வாடி” என்றுதான் மேடையில் குறிப்பிடுவார். .

நெகிழ்ந்துபோய் அப்படிச் சொல்வதாக தோன்றும். ஆனாலும் ஒரு மாதிரியாக இருக்கும். இருந்தும் மிஷ்கின் இந்த பழக்கத்தை மாாற்றிக்கொண்டதே இல்லை.

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவின் வீடியோ பார்த்தேன்.

அதில் அவர், “என்கிட்ட சில நாட்கள் உதவி இயக்குநரா அவங்க வேலை பார்த்தாங்க.. அவங்க திறமை சாலி.. அவங்களோட…” என வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’ போட்டு பேசினார்.

அவரால் அப்படி மிக மரியாதையாக குறிப்பிடப்பட்ட வர்  –  இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

ஆக, வேலியில் மோத மிஷ்கின் தயாரில்லை!

நல்லதுதான்! 

இதே மரியாதையை அனைத்து பெண்களுக்கும் மிஷ்கின் அளிக்க வேண்டும்.

இந்த வலியுறுத்தல், மிஷ்கினுக்கு மட்டுமல்ல.. அவரைப்போல பொது இடத்தில் பெண்களை ஒருமையில் பேசும் அனைவருக்கும்தான்!

– டி.வி.சோமு

Related Posts