ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்!

ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்!

2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் மூன்றாவது முறையாக தேர்தல் நடக்க இருக்கிறது.

வரும் 2026ல் மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. அப்போது மார்ச் மாதம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இப்போது இடைத்தேர்தலுக்காக அமலுக்கு வந்திருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் பிப்ரவரி 8 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தொடரும்.

இந்த காலத்தில் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது. இதோ.. இப்போது அந்தத் தொகுதியில், பொங்கல் பரிசு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தவிர தேர்தல் காலத்தில் ஆட்சியர் முதற்கொண்டு கீழ்மட்ட அதிகாரிகள் வரை தேர்தல் வேலையில் இருப்பார்கள். தாசில்தார் அலுவலகம் முதல் இதர அரசு அலுவலகங்களில் வழக்கமான மக்கள் பணி நடக்காது. காவல்துறையினருக்கும் கூடுதல் வேலைப்பளு. அரசுக்கு செலவு.

இடைத் தேர்தல் வரும் சூழல் இருந்தால், வெற்றி பெற்ற கட்சியின் இன்னொரு நபரை சட்டமன்ற (அல்லது நாடாளுமன்ற) உறுப்பினர் ஆக்கலாம். அல்லது தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்தவரை, உறுப்பினர் ஆக்கலாம்.

இந்த இரண்டு கோரிக்கைகள் பல காலமாக வைக்கப்படுகின்றன.  கண்டுகொள்ளப்படவில்லை.

ஒருவேளை, இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டம் இயற்றி அமலுக்கு வருவது என்பது நடக்குமோ நடக்காதோ..

குறைந்தபட்சம், ஒரு வருட காலத்துக்குள் பொதுத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் இடைத் தேர்தலை தவிர்க்கலாம்.  அந்த வகையில்,  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ரத்து செய்யலாம். இடைப்பட்ட பதினோரு மாதங்கள் புது எம்.எல்.ஏ. வந்து ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை.

சிலர், “அய்யோ ஜனநாயகம் என்ன ஆவது” என்று குதிப்பார்கள்.

இந்திய தேர்தல் போன்ற காமெடி வேறு ஏதும் இல்லை.

தொகுதியில் 51%  வாக்கு வாங்கியவர் வெற்றி.  49% சதவிகிதம் வாங்கியவர் தோல்வி. அதாவது 49% மக்களின் உணர்வு புறக்கணிக்கப்படுகிறது.

ஒரே ஒரு ஓட்டு பதிவானால்.. அந்த ஓட்டை வாங்கியவர் வெற்றி என்பதே சட்டம்.

இரு தொகுதிகளில் ஒருவரே போட்டியிட்டு, இரண்டிலும் வென்றால் ஒன்றில் ராஜினாமா. மீண்டும் ஒரு தொகுதியில் தேர்தல். மக்கள் பணம் வீண்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

தவிர ஏற்கெனவே சொன்னது போல அரசு அலுவலர்கள், காவலர்களுக்கு கூடுதல் வேலைப்பளு, மக்கள் பணி நடக்காது, அரசுக்கு செலவு, அன்றாட பிழைப்பு நடத்துவோருக்கு சிரமம்…

ஆகவே குறுகிய காலத்தில் பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கும் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது.

அதற்கு ஆரம்பமாக,  ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கட்டும்.

இத்தொகுதியின் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படட்டும்!

– டி.வி.சோமு

Related Posts