‘வீராயி மக்கள்’: திரைப்பட விமர்சனம்
உறவுகளின் உன்னதத்தை ரத்தமும் சதையுமாய் சொல்லும் திரைப்படம்.
அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் ஒரே ஊரில் – தெருவில் வசிக்கிறார்கள். ஆனால் பேச்சுவார்த்தை கிடையாது.
இவர்களது பகை, அடுத்த சந்ததிக்கும் செல்கிறது. அவர்களது பிள்ளைகளும் முறுக்கிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களில் வித்தியாசமானவர், வேல.ராமமூர்த்தியின் இளையமகன், (நாயகன்) சுரேஷ் நந்தா. இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் இவர்.
அவரது எண்ணம் பலித்ததா… பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.
வேல ராமமூர்த்தி எப்போதும் போல் செயற்கையான நடிப்பு. அவரது தம்பியாக வரும் (மறைந்த) மாரிமுத்து எப்போதும் போல இயல்பான நடிப்பு. ஆத்திரத்தில் பேசுவது, உறவுகளை உதறுவது.. அடடா.. என்னவொரு இயல்பான நடிப்பு! இவரது இடத்தை நிரப்பப்போவது யார்?
நாயகன் சுரேஷ் நந்தா, சிறப்பாக நடித்து உள்ளார். முறைப்பெண்ணை காதலிக்கும் காட்சியில் கவர்கிறார்.. அதே போல, சண்டைக் காட்சிகளிலும் ஜமாய்க்கிறார்.
நாயகி நந்தனா, அண்ணன்களின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக வரும் தீபா சங்கர், மாரிமுத்துவின் மனைவியாக வரும் செந்தி குமாரி உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்த நடித்து உள்ளனர். வேல ராமமூர்த்தியின் மனைவியாக வரும் ரமாவின் நடிப்பு பரவாயில்லை என்றாலும் அதீத மேக்கப், அவரை அந்நியப்படுத்தி விடுகிறது.
தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்களில் சொக்க வைக்கின்றன. ‘செங்கொடி ஊருக்கு..’, ‘நெஞ்சுக்குள்ள…’ உள்ளிட்ட பாடல்கள் இதம்.
கிராமத்து மண்ணையும் மக்களையும் அப்படியே அள்ளித்தந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன்.
உறவுகள் எவ்வளவ அவசியமானவை… சிறு ஆத்திரம்கூட பெரும் பிளவை ஏற்படுத்தி விடுகிறது என்பதை சிறப்பாக சொல்லி இருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா பாராட்டுக்குரியவர்.
மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.