வேதா : விமர்சனம்
அசீம் அரோரா எழுதிய கதையை, நிகில் அத்வானி இயக்க, ஷர்வாரி, ஜான் ஆபிரகாம், தமன்னா உள்ளிட்டோர் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ள திரைப்படம், வேதா. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டு உள்ளன.
இப்படியான ஒரு கதையை சிந்தித்ததற்காகவே, கதாசிரியர் அசீம் ஆரோராவை பாராட்ட வேண்டும். இந்த நவீன காலத்திலும் சாதீய அடக்குமுறை எந்த அளவுக்கு கொடூரமாக கோலோச்சுகிறது என்பதை சொல்லும் கதை.
இதை ரத்தமும் சதையுமாக, நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் நிகில் அத்வானி.
வட இந்திய கிராமப்பகுதியில் கதை நடக்கிறது. சுற்றிலும் நூற்றி ஐம்பது கிராமங்களை ‘ஆளும்’ ஜமீன் குடும்பம், தான் வைத்ததே சட்டம் என்று மக்களை அடக்கி ஆள்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை கற்க விரும்புகிறாள். அதனால் அவமானப்படுத்தப்படுகிறாள். பிறகு அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்கிடையே அவளது சகோதரன், உயர் சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலிக்க.. காதலர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். இந்த பெண்ணையும் அவளது சகோதரியையும் துரத்துகிறது மேல் சாதி வெறிக்கும்பல்.
அப்போது ஆபத்பாந்தவனாக வருகிறார் முன்னாள் ராணுவ வீரர்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகளுடன் சொல்லி இருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக வருகிறார் ஷர்வாரி. அற்புதமான நடிப்பை அளித்துள்ளார். சாதியைச் சொல்லி நம்மை ஒடுக்குகிறார்களே என்கிற ஆதங்கம், குத்து சண்டை கற்கும் ஆர்வம், கண் முன்னே அண்ணனும் அவனது காதல் மனைவியும் கொல்லப்படுவதைக் கண்டு அதிர்ச்சி, நாயகனுடன் இணைந்து தப்பிக்க நடத்தும் போராட்டம்… அசத்தி இருக்கிறார் ஷர்வாரி.சாதியால் ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கும் முன்னாள் ராணுவ வீரராக வருகிறார் ஜான் ஆபிரகாம். கம்பீரமும் கனிவும் கலந்த முகபாவனையும், உடல் மொழியும் மிகப் பொருத்தம். அநீதி கண்டு பொங்குவது, நிதானமாக எதிரிகளுடன் பேசுவது, பேச்சுவார்த்தை சரி வரவில்லை என்றவுடன் அதிரடியாக களம் இறங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜான் ஆபிரகாம்.
ஜான் ஆபிரகாமின் காதலியாக பிளாஸ் பேக் காட்சிகளில் வருகிறார் தமன்னா. டூயட் பாடல்களில் ரசிக்கவைக்கிறார். அநியாயமாக கொல்லப்பட்டு உயிரை விடுகிறார்.
இதர கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர்.
வறண்ட கிராமங்கள், குளிர்ச்சியான காஸ்மீர் என்று இரு வேறுபட்ட இடங்களையும் இயல்பாக படம் படித்து அளித்திருக்கிறது ஒளிப்பதிவு.
இசையும் ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க பயணிக்கிறது. ‘ஹோலியான்’, ‘மம்மி ஜி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அற்புதம்.
இந்த காலத்திலும் நடக்கும் சாதீய கொடுமைகளை, கண்முன் காட்டிய இயக்குநர் பாராட்டுக்கு உரியவர்.
அதே நேரம், சாதியாக மனிதரை பிரிக்கும் கீதோபதேசத்தை, சாதி மறுக்கும் இந்த படத்துக்கு பயன்படுத்தி இருப்பது முரண்.
ஆனாலும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.