நடிகர் சுசீந்திரன் மீது தயாரிப்பாளர் முக்தா ரவி புகார்!
தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக சுசீந்திரன் என்ற நடிகர் மீது தயாரிப்பாளர் முக்தா பிலிம்ஸ் முக்தா பிலிம்ஸ் நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான, முக்தா ரவி காவல்துறையில் புகார் அளித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.
சிவாஜி கணேசன், ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ராஜ்கிரண், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறோம்.
முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தில் ஆரம்பத்தில் முத்தா ராமசாமி மற்றும் முக்தா சீனிவாசன் ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். தற்போது முக்தா சீனிவாசனின் மகனான நானும், என் சகோதரர் முக்தா சுந்தரும், எங்கள் தாயார் பிரேமாவும் பங்குதாரராக இருந்து வருகிறோம். நான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேேன்.
தற்போது எங்கள் நிறுவனத்தின் மூலம் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தயாரிக்கவில்லை. சொந்தமாக ஒரு ஓ.டி.டி. தளத்தை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில் சுசீந்திரன் என்ற நடிகர் எங்கள் வலைத்தளத்தை பயன்படுத்தி, தான் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் புதிதாக படம் தயாரிப்பதாகவும் அறிவித்து உள்ளார். மேலும் அவர், நடிகைகள் தேவை என்று அறிவித்து பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததையும் அறிந்தோம். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம்.
தவிர, இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் சம்மந்த பட்ட சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அனுமத்திருக்கிறோம். எனவே நடிகர், நடிகைகள் யாரும் ஏமாற வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” – இவ்வாறு முக்தா ரவி தெரிவித்து உள்ளார்.