டிமான்ட்டி காலனி 2 : விமர்சனம்
2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் இது. இதிலும் அஜய் ஞானமுத்துவும் அருள் நிதியும் கூட்டணி அமைத்துள்ளனர். மேலும், பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இங்கே இரண்டாம் பாகம் என்றாலே, பெயர் மட்டும் தொடர்ந்து வரும்.. கதை வேறு மாதிரி இருக்கும். ஆனால் இந்த படத்தில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளனர். இதற்காகவே பாராட்டலாம்.முதல் பாகத்தில், நாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பித்து இருப்பார்கள். ஆனால் அவர் இறக்கவில்லை என்பதே இரண்டாம் பாகத்தின் ஆரம்பம்.
அவரை காப்பாற்றியது யார், எதற்காக என்பதைதிகிலுடன் சொல்வதே இந்த பாகம்.
2009, 2015, 2021 என வெவ்வேறு காலகட்டங்களில் கதை நகர்கிறது. முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் ஒருசேர அழகாக திரைக்கதை அமைத்து அழைத்துச் செல்கின்றனர். இது சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.
நாயகன் அருள் நிதி எப்போதும்போல இயல்பாக சிறப்பாக நடித்து உள்ளார். தம்பியின் சொத்துக்காக ஆசைப்படுவது, பிறகு உண்மை தெரிந்து தம்பியை காப்பாற்ற முனைவது, திகில் காட்சிகளில் மிரட்டுவது என அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனக்கு நகைச்சுவையும் வரும் என்பதை சில காட்சிகளில் வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். மொத்தத்தில் அவரது நடிப்பு அசத்தல்.
நாயகி பிரியா பவானி ஷங்கரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். காதலனை நினைத்து ஏங்குவது, அமானுஸ்ய பிரச்சினையை தீர்க்க போராடுவது என்று அசத்தி இருக்கிறார்.
சார்பட்டா முத்துக்குமார், அருண் பாண்டியன், சீன நடிகர் செரிங் டோர்ஜி உள்ளிட்ட அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சாம் சி.எஸ். பின்னணி இசை, படத்துக்கு பலம். ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து உள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை, அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது அஜய் ஞானமுத்துவின் திரைக்கதை, இயக்கம். தவிர, வழக்கமான பாணியில் இல்லாமல் புதுவிதமான பேய்ப் படம் அளித்ததற்காகவும் அவரை பாராட்டலாம்.
மொத்தத்தில் பேய்ப்பட – த்ரில் பட விரும்பிகள் ரசித்து பார்க்கலாம்.