“சாதீயத்தைத் தோலுரிக்கிறது!”: நந்தன் படத்துக்கு திருமா பாராட்டு!

“சாதீயத்தைத் தோலுரிக்கிறது!”: நந்தன் படத்துக்கு திருமா பாராட்டு!
இரா.சரவணன் இயக்க, சசிகுமார் நாயகனாக நடித்த நந்தன் திரைப்படம் கடந்தவாரம் வெளியானது. ஆதிக்க சாதியினரால் பட்டியலினத்தவர் ஒடுக்கப்படுவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது இந்தத் திரைப்படம்.
படத்தைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்திருமாவளவன், கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர்,  ‘ஆள்வதற்கு மட்டுமல்ல; வாழ்வதற்கும் அதிகாரம் தேவை’ என உரத்துப் பேசும் இயக்குநர் இரா.சரவணனின் குரல் ‘நந்தன்’ குரலாக ஒலிக்கிறது. ஊராட்சி அமைப்புகளில் சாதியம் எவ்வாறு கோரத் தாண்டவம் ஆடுகிறது என்பதை துணிச்சலாயத் தோலுரிக்கிறார் இயக்குநர் சரவணன்.
ஊராட்சிமன்றத் தலைவர் அம்பேத்குமாரை நிர்வாணப்படுத்தி ஊரே வேடிக்கை பார்க்க செருப்புக்காலால் மிதிக்கும் குரூரம் நெஞ்சைப் பதைக்க வைக்கிறது. அது சட்டத்தையும் சனநாயகத்தையும் மிகக் கேவலமாக இழிவுப்படுத்தும் கொடூரமான சாதி ஆணவத்தின் உச்சம்.
உள்ளாட்சி அமைப்புகள் வரையில் எளியோருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான் சனநாயகத்தைச் செழுமைப்படுத்தும் நடவடிக்கை.
ஆனால், ஊர்களின் வேர்களில் இன்னும் சனாதனமே கோலோச்சுகிறது; சாதியமே கொட்டமடிக்கிறது என்பதை ஆவேசத்துடன் அம்பலப்படுத்தும் தோழர் சரவணன் அவர்களுக்கு ‘அடங்கமறுப்போரின்’ சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள்.
நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் நடத்தும் அறப்போர் சனநாயகத்தை உயிர்ப்பிக்கிறது. சாதியத்தின் கோரமுகத்தைக் கண்முன்னே நிறுத்துகிறார் இயக்குநர் பாலாஜிசக்திவேல். சாதி வெறியாட்டத்தை எதிர்க்கும் போர்க்குணம் பெண்களுக்கும் தேவையென்பதை உணர்த்துகிறார் சுருதி பெரியசாமி.
களப்பலியாகும் நாயகன் நந்தன் சனநாயகத்தை நாடும் போராளி.  “இனிமேல் தான் எங்கள் ஆட்டம் ஆரம்பம்” எனச் சீறும் சிறுத்தை அம்பேத்குமார் சமூகநீதியைக் காக்கும் போராளி.
சாதியத்தின் வன்மம் கண்டு கொதிக்கும் தோழர் சரவணன் சமத்துவத்தைத் தேடும் போராளி.
வெல்லும் சனநாயகம்!” என்று  தொல்.திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.