‘மெய்யழகன்’ ரீவைண்ட்: படப்பாடல் வரிகளை மாற்றிய பிரிண்ட்டர்கள்!

‘மெய்யழகன்’ திரைப்படம், சொந்த ஊர், உறவுகள் பற்றிய நினைவுகளை கிளறிட்டது! படத்தின் சிறப்புக் காட்சிக்குச் சென்றபோது, இன்னொரு பழைய நினைவையும் ரீவைண்ட் செய்ய வைத்து விட்டனர் படக்குழுவினர்.
ஆம்.. படத்தின் பாட்டு புத்தகத்தை அன்பளித்தார்கள்! அதுவும், அந்தக் காலத்திய பாட்டு புத்தகத்தை அப்படியே அச்சு எடுத்தது போல.. இருவண்ணம் படத்தின் போஸ்டரே படம்… ஆகா, அற்புதம்!இந்தப் படத்தில் வரும் தஞ்சாவூர்தான் – படத்தின் இயக்குநர் பிரம்குமார் போலவே – எனக்கும் அதுதான் சொந்த ஊர்.
கீழவாசல், கோவில் தெருவில் வீடு.
எனக்கு மங்கலாக நினைவில் இருக்கிறது…!
பக்கத்து வீட்டு அண்ணன், சினிமா பாடல் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கும். அவ்வப்போது பாடும்.
கமல் நடித்த, ‘குரு’ படத்தின் பாடல்களை, பக்கத்து வீட்டு அண்ணன், பாடுவது எங்கள் வீடு வரை கேட்கும்.
‘பறந்தாலும் விட மாட்டேன்…’ என்கிற பாடலை எஸ்.பி.பி. குரலிலும் (!) ஜானகி குரலிலும்(!) மாற்றி மாற்றிப் பாடுவது, எங்கள் வீடு வரை கேட்கும்; எல்லோரும் சிரிப்போம்.
என் அம்மாதான், “அடேய்.. ஒரே குரல்லயாவது பாடித்தொலைடா.. சகிக்கலை” என்று இங்கிருந்து கத்தும்.
அப்புறம் பாடல் சத்தம் (கொஞ்ச நேரத்துக்கு) கேட்காது. மீண்டும் ‘வைதேகி காத்திருந்தாள்’ வெள்ளைச் சாமியாய் அண்ணன் பாட ஆரம்பித்துவிடும்.
பொருட்காட்சி, கோயில் திருவிழாக்களில் பாடும் மேடைப் பாடகர்கள் கையில் இந்த பாடல் புத்தகங்கள் இருக்கும். அத்தனை அற்புதமாக பாடுவார்கள்.
திரையரங்குக்கு வெளியே வெளியே, தரையில் படுதா விரித்து வரிசை வரிசையாய் பாட்டு புத்தகங்களை வைத்து விற்பார்கள். அதை வாங்க இளைஞர்கள் கூட்டம் முண்டியடிக்கும்.
எழுதும்போது புத்ததகம் என குறிப்பிட்டாலும், பேச்சு வழக்கில், “புஸ்தகம், பொஸ்தகம்”தான்.
விலை பைசாக்களில் இருக்கும்.
பக்கத்து வீட்டு அண்ணன் வாங்கி வரும் புத்தகங்களை நான் படிப்பது உண்டு. நல்லவேளை, படிப்பது மட்டுமே!
அந்த புத்தகத்தில், பாடல்களோடு, படக்குழுவினரின் விவரம், எல்லாம் போட்டிருக்கும். தவிர, பல்லவி, சரணம், வகையறா என்கிற பாடல் வார்த்தைகளை அதில்தான் கண்டேன்.
சில புத்தகங்களில் படத்தின் கதைச் சுருக்கத்தைக்கூட போட்டிருப்பார்கள். பாதியைச் சொல்லிவிட்டு, ‘மீதி வெள்ளித்திரையில் காண்க’ என முடிப்பார்கள்.
சில புத்தகங்களில், பாடலின் வரிகள் மாற்றப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டு அண்ணன் புகார் சொன்னதும் நினைவில் இருக்கிறது. அச்சகத்தில் வேலை பார்ப்பவர்களில் கவிஞர்கள் இருக்க மாட்டார்களா என்ன..!
பிரபலமான இந்திப் பட பாடல்கள்கூட தமிழில் புத்தகங்களாக வரும். இந்தி வரிகள் அப்படியே தமிழில் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
‘ஷோலே’ படம், தஞ்சை குமரன் தியேட்டரில் ஓடியது. வெளியே மணல் வெளியில், அந்த படத்தின் பாட்டு புத்தகம் விற்கப்பட்டதாக நினைவு.
மொழி கடந்து தமிழ்நாடு முழுதும் ஓடிய திரைப்படம், ‘சங்கரா பரணம்’. தஞ்சை அருள் தியேட்டரிலும் பல நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகள்!
பாடல்களுக்காகவே வெற்றிகண்ட அந்தப் படத்தின் பாடல் புத்தகம் வெளியானதாக தெரியவில்லை. ஆச்சரியம்தான்!
குறிப்பிட்ட படங்களின் பாட்டு புத்தகம் போலவே, சோகப்பாடல்கள், தத்துவப்பாடல்கள், சிவாஜி பட பாடல்கள், எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் என பல படங்களின் பாடல்கள் தொகுப்பும் விற்பனைக்கு வரும்.
எங்கள் வீட்டில் குடியிருந்த சுந்தரி அக்கா எனக்கு ரொம்பவே பெஸ்ட். அவர்களது வீட்டில் வானொலி கிடையாது. எங்கள் வீட்டுக்கு வந்துதான் கேட்கும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிதான் அப்போது டாப். திரைப்பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திருச்சி விவித் பாரதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகள் – திரைப்பாடல்கள் – ஒலிபரப்பாகும்.பாடல் ஒலிக்கும்போது, தானும் சேர்ந்து சுந்தரி அக்கா மெல்லிய குரலில் பாடும். அத்தனை அற்புதமான குரல். பாடகி பாடுவது போலவே இருக்கும்.
திடீரென ரேடியோவை ஆன் செய்யும்போது ஏதோ ஒரு பாடலின் துவக்க இசை அல்லது இடை இசை கேட்கும் இல்லையா… அந்த விநாடியே அது எந்த பாடல் என்பதை அக்கா சொல்லிவிடும்.
இதர நேரங்களில், பாட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டு அக்கா பாடுவதும் உண்டு. ஆச்சரியம் என்னவென்றால், கண்களை மூடி ரசித்து பாடுமே தவிர, கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்ததே இல்லை!
பிரமிப்பாக இருக்கும்!
என் நண்பன் சேகர், பாடல் பாடும்போது, இடையில் வரும் மாட்டு வண்டி, ரயில் ஓசைகளையும் சேர்த்தே பாடுவான். பிறர் சிரிப்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்.
நகரின் நடுவே ஓடும் புதாற்றின் பாலத்தைத் தாண்டி, ஒரு கடையின் ஓரத்தலும் பெட்டிக் கடையில் பாடல் புத்தகங்கள் தொங்குவதைப் பார்த்து இருக்கிறேன்.
கீழவாசல் மார்க்கெட்டில், தாய் புத்தகக் கடை என்று ஒன்று இருந்தது. பள்ளிப் பாட புத்தகங்களை அங்குதான் வாங்குவோம். ஒரு முறை… எனக்கு பள்ளி திறந்த நேரம்.. அப்பாவுடன் சென்று பாட புத்தகம் வாங்க அங்கு போனேன்.
ஆர்வத்தில், “சினிமா பாட்டு புக்கு இருக்கா” என்று நான் கேட்க.. கடைக்காரர் முறைத்தாரே ஒரு முறைப்பு! இன்றைக்கும் வயிற்றைக் கலக்கும்!
பின்னாட்களில் ஒரு கட்டுரையில் படித்தேன்…தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931ல்) வெளியான போதே, பாடல் புத்தக கலாச்சாரமும் வந்துவிட்டதாம்!
அடுத்தடுத்து வரும் நவீன மாற்றங்கள், பழையவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றி விடுகின்றன. ஆனாலும் ஏதோ ஒன்று, பழைய பொருட்களை நினைவுபடுத்தும்போது, நெஞ்சம் கனத்துப்போகிறது.
அப்படியான ரீவைண்ட் உணர்வை ஏற்படுத்திவிட்டது, ‘மெய்யழகன்’ படத்தின், பாடல் புத்தகம்!
இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
– டி.வி.சோமு, பத்திரிகையாளர்
Sep 29, 2024
(மெய்யழகன் பாடல் புத்தகத்தை படித்ததும், போஸ் கொடுத்ததும் நான்தான்!)