“யோகிபாபு – அஜித் – நடு ராத்திரி..”: ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொன்ன புதுக் கதை!

“யோகிபாபு – அஜித் – நடு ராத்திரி..”: ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொன்ன புதுக் கதை!

தன்னைப் பற்றி தவறாக பேசக்கூடாது என்றால் பணம் தர வேண்டும் என வலைப்பேச்சு யு டியுப் குழுவினர் தெரிவித்ததாக, நடிகர் யோகி பாபு கூறினார். அதற்கு, வலைப்பேச்சு குழுவினர், ‘யோகிபாபுவுக்கு நடிக்கத்தெரியாது, ஈத்தரை, குப்பை, அவர் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்யட்டும்… அஜித் குறித்து தவறான தகவல் தந்தது யோகிபாபுதான்’ என்றெல்லாம் ஏசினர்.

இந்த விவகராத்தில் வலைப்பேச்சு குழுவரை சமூகவலைதளத்தில் பலரும் கண்டனம் செய்து வருகின்றனர்; மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

யு டியுப் சேனல்களிலும் சிலர் இது குறித்து பேசி வருகின்றனர். பத்திரிகையாளர் டி.வி.சோமுவும் இது குறித்து பேட்டி அளித்தார். முன்னதாக இதே கருத்தை முகநூலில் பதிவாகவும் வெளயிட்டார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“யோகி பாபு பேசிய வீடியோ வெளியான போதே வலைப்பேச்சு குழுவினர், பதில் சொல்லவில்லை. குறிப்பிட்ட அந்த பேட்டி வைரலான பிறகு – சமூகவலைதளத்தில் பலரும் விமர்சிக்க ஆரம்பித்த பிறகு – விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

‘திரையுலக செய்திகள் எங்கள் காதுக்கு வராமல் போகாது. அவற்றை முந்தித்தருகிறோம்’ என வலைப்பேச்சினர் பெருமை கொள்வது உண்டு. குறிப்பிட்டஇந்த விவகாரத்தில் – அதுவும் அவர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டு குறித்து – ஏன் இத்தனை தாமதம்?

‘திருடன்களுக்கு தேள் கொட்டி விட்டது போல’ என்று யோசிக்க வைக்குமே!

யோகிபாவுக்கான விளக்கத்தில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள், “ஒரு முறை நாம, ‘படப்பிடிப்பு ஒன்றில் நாயகனின் கையை யோகிபாபு பிடிக்க வேண்டிய சீன். அந்த ஹீரோவோ ‘டோன்ட் டச்’னு சொல்லி அவமானப்படுத்திட்டாரு. அதை நாம சொன்னோம். ஆனா பத்திரிகை தர்மம்(!) கருதி, சொன்னவர் யாருன்னு நாம பேசலை. அதை நமக்கு சொன்னவரு யோகி பாபுவேதான்” என்கிறார்.

‘எங்ககிட்ட முறைச்சுக்கிட்டா, நீங்க பேசினதெல்லாம் பப்ளிக்கா சொல்லிடுவோம்’ என்பததுதானே இன் அர்த்தம். இதுதான் பத்திரிகை தர்மமா?

பிஸ்மி அவர்கள் குறிப்பிட்ட, அந்த வீடியோவை (இப்போதுதான்) பார்த்தேன்.
“யோகிபாபுவிடம் டோன்ட் டச் சொன்ன ஹீரோ” என்கிற மாதிரி தலைப்பு வைத்து இருந்தார்கள்.

அதிர்ச்சியாக இருந்தது.

‘என்னைத் தொடதே’ என்கிற சம்பவம், (உண்மையானால்) வன்கொடுமை. இதில் வன்கொடுமை புரிந்தவரின் பெயரைத்தான் சொல்ல வேண்டும்.. பாதிக்கப்பட்டவரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், வலைப்பேச்சு குழு அப்போது, “அந்த மாதிரி செஞ்சது ரஜினியா… இல்லே இல்லே.. இவரா.. அட… அவருமில்லே..” என நழுவிப்போய் இருக்கிறது.

அஜித் அப்படி நடந்துகொண்டு இருந்தால் – அதை உண்மை என நம்பிய வலைப்பேச்சுக் குழு – அஜித் பெயரைச் சொல்லி கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம். அதை அவர்கள் ஏன் செய்யவில்லை.

தவிர, அஜீத் அப்படிப்பட்டவர் அல்ல என்பது ஊடகத்துறையினர் அனைவருக்கும் தெரியும். பல்வேறு சம்பவங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

நான் நேரடியாகப் பார்த்த இரு சம்பவங்களும் உள்ளன.

என் மூத்த சகோதரர் போன்றவர் ( மறைந்த) பத்திரிகையாளர் சந்துரு. பிரபல இதழ்களில் திரைப்பட செய்தியாளராக பணியாற்றியவர்.

அவர், நோயுற்று மருத்துவமனையில் மரணமடைந்துவிட்டார். உடல் வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. மாடியில் வீடு.

அவரது உடலை தூக்கிச் செல்லவேண்டும். முதலில் தோள் கொடுத்தவர் – செய்தி அறிந்து பதறி அடித்து அங்கு ஓடிவந்த – அஜித்!

இன்னொரு சம்பவம்…

அஜித் – ஷாலினி திருமணம் நடந்த சில பல நாட்களில், நட்சத்திர ஓட்டலில் சினிமா செய்தியாளர்களுக்கு விருந்து வைத்தார்.

அஜித் – ஷாலினி புதுமணத் தம்பதியினர் அனைவரையும் உபசரித்தனர். அப்போது சர்வர் ஒருவர், தயங்கித் தயங்கி அஜித்திடம் நின்றார். அஜித் என்னவென்று விசாரிக்க… ‘உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்றார்.

உடனே அங்கு (சாப்பிடாமல் பேசிக்கொண்டு இருந்த) புகைப்படக் கலைஞர் ஒருவரை அழைத்து படம் எடுக்கச் சொன்னார் அஜித். அதோடு, சர்வரின் முகவரியை புகைப்படக் கலைஞரிடம் கொடுக்கச் சொன்னார். தவிர,புகைப்படக் கலைஞர் மறுத்தும் பணம் கொடுத்து, “படத்தை அவருக்கு மறக்காம அனுப்புங்க” என்றார்.

தன் தோள் மீது அஜித கை போட்டு எடுக்கப்பட்ட அந்த படம் இன்னும் அந்த பேரர் வீட்டில் இருக்கும்.

அஜித் குறித்த இந்த இரு சம்பவங்களுக்கு நானே – நானும் – நேரடி சாட்சி.
இப்படி சிறந்த மனிதாபிமானியாக இருக்கும் நடிகர் அஜித், “டோன்ட் டச்” என யோகிபாபுவை சொல்லி இருக்கவே மாட்டார். சினிமாவின் அத்தனை உள்ளும் – புறமும் தெரிந்த வலைப்பேச்சுக்குழு… குறிப்பாக அண்ணன் அந்தணன் மற்றும் பிஸ்மிக்கு இது தெரியாதா…

“அஜித் படத்துல யோகிபாபு நடிச்சப்போ சூட்டிங் சரியா போகல. அதனால அவரோட அடுத்த படத்துல யோகிபாபு இல்லே.. இந்த கோவத்துல யோகிபாபு நம்மகிட்ட அப்படிச் சொல்லிட்டாரு” என்கிறார் பிஸ்மி அவர்கள்.

தவிர ஒரு ரீல்ஸ் பார்த்தேன். அதில், “அஜித் முதல் படம் நடித்ததில் இருந்து எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி…” என்று புகழ்கிறார்.

அப்படியானால் தெரிந்தே, வலைப்பேச்சுக்குழு பொய் சொன்னது என்றாகிறது. ஏன் இந்த பொய்?

“தங்களை, யோகிபாபு அம்பலப்படுத்திவிட்டார் என்றவுடன் இப்போது, யோகிபாபுதான் சொன்னார் என்பது உண்மையாக இருக்குமா” என்ற கேள்விதானே எழும்?

யோகிபாபுவுக்கான விளக்க வீடியோவில், “அவருக்கு நடிக்கவே வராது” என்கிறார் வலைப்பேச்சுக் குழுவின் பிஸ்மி. அதே குழுவில், தம்பி சக்திவேல், “மண்டேலா படத்தில் அவரு சிறப்பா நடிச்சதை புகழ்ந்தோமே” என்கிறார்.

ஏன் இந்த முரண்….?

தவிர, “யோகிபாபு ஒரு நாளைக்கு நடிக்க 25 லட்ச ரூபாய் வாங்குறாரு. அதில ஐந்து லட்சம்தான் கணக்குல காட்டுறாரு. மத்ததெல்லாம் பிளாக் மணிதான்” என்று தேசப்பற்றோடு சொல்கிறது வலைப்பேச்சு குழு.

அடடா.. என்ன ஒரு தேசப்பற்று…! ஆமாம்.. சரியாக வருமானவரி செலுத்துவதும்… செலுத்தாதவர்களை அம்பலப்படுத்துவம் தேசப்பற்றுதானே! வருமானவரி பணத்தில்தானே, அரசின் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன!

ஆனால் வலைப்பேச்சு குழுவின் நோக்கம் இதுதானா என்கிற கேள்வி எழத்தானே செய்யும்!
“எங்களை அம்பலப்படுத்தினால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம்.. சிக்கல் கொடுப்போம்” என்று பிற நட்சத்திரங்களுக்கு மிரட்டல் விடுப்பது போலத்தானே இருக்கிறது!

கடைசியில் தரை லோக்கலுக்கு இறங்கி, “சத்தியம் பண்ணு வா” என்பதெல்லாம் என்னதான் ஊடக தர்மமோ…

இவர்கள் சொல்லும் “செய்திகளுக்கு“ எல்லாம் ஆடியோ, வீடியோ ஆதாரமோ, சத்தியமோ செய்கிறார்களா?

தவிர, “யோகிபாபுவை வச்சு படம் எடுத்த நிறைய டைரக்டருங்க அவரைப்பத்தி புகார் சொல்லி இருக்காங்க. ஆனா, ‘இப்ப என் பெயரை சொல்லிடாதீங்க.. டப்பிங் முடிஞ்சோன சொல்லுங்க..’ என்று கூறியதாக வலைப்பேச்சினர் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட படங்கள் பல, டப்பிங் முடிந்து வெளியாகி இருக்குமே.. இப்போது சொல்லலாமே!

இதைவிட கொடுமை, யோகிபாபுவை, “ஈத்தரை, குப்பை…” என்றெல்லாம் ஏதுவது!
காமெடியனான அறிகமுகமான யோகிபாபு எப்போதோ ஹீரோ ஆகிவிட்டார்.

பத்திரிகையாளர் போர்வையில் வலம் வரும் வலைப்பேச்சினர், காமெடி வில்லன்களாக காட்சி அளிக்க ஆரம்பித்துவிட்டனரே!

அற்புத எழுத்துக்குச் சொந்தக்காரர், சுவையாக பேசுபவர் (எழுத்து ரீதியாக என்) அண்ணன் அந்தணன் உள்ளிட்டோரை நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது.

யோகி பாபு பிரபல நடிகர் என்பது இருக்கட்டும்.. எவரையும் பொதுவில், ஈத்தரை, குப்பை என பேசுவது என்ன நாகரீகம்?

“இவர்களுக்கு எல்லாம் ஏன் பதில் அளிக்க வேண்டும்” என யோகிபாபு, நாகரீகமாக பதிவிட்ட ட்விட்கள் மதிக்கத்தக்கவை. உழைப்பால் உயர்ந்தவரின் பதில் – பதிலடி – இப்படி நாகரீகமாகத்தான் இருக்கும்.

ஆனால் ஒரு நடிகரை இழிவாக பேசிய வலைப்பேச்சினருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

நடிகையரை இழிவாகப் பேசிய நடிகர்களுக்கே கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், இந்த விசயத்திலும் தமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
வலைப்பேச்சினரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பத்திரிகையாளர் டி.வி.சோமு, எழுதி/பேசி இருந்தார்.

இதற்கு அந்தணன், தனது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

அதில்..

“சில வருடங்களுக்கு முன்…

அதிகாலை 3 மணிக்கு யாரோ ஒருவ(ன்)ர் கதவை தட்ட அரை தூக்கத்தோடு க்ரில் கதவு வழியே எட்டிப் பார்த்தேன். அரையிருட்டிலும் பளிச்சென்று தெரிந்த அழுக்கு சட்டை, முதல் நாள் குடியின் மிச்சம் கண்களில் வழிய அந்த நபர் நின்றிருந்தா(ன்)ர்.

அண்ணே, அவசரமா இரண்டாயிரம் வேணும். கிடைக்குமா?

கடன் கேட்கிற நேரமாடா இது? என்று உதடு வரை எரிச்சல் வந்தாலும், நாகரீகம் தடுக்க… கொஞ்சம் இருங்க என்று க்ரில் இடுக்கு வழியே கொடுத்தனுப்பினேன்.

அந்த நபர் டி.வி.எஸ் சோமு. எங்களை டுபாக்கூர் என்றும், பணம் கேட்டோம் என்றும் கேவலப்படுத்திய யோகிபாபுவுக்கு ஆதரவாக பொங்கிக் கொண்டிருக்கிற நபரும் இவ(ன்)ர்தான்.

அடேய்ங்களா… திடீர்னு காந்தியாவாதிங்கடா? தப்பு செய்யாம அடிபட்டவனுக்குதான்டா வலி தெரியும்.

இன்னொருத்தன் பற்றி நாளைக்கு….” என்று குறிப்பிட்டு இருக்கிறார் அந்தணன்.

இதற்கு பத்திரிகையாளர் டி.வி.சோமு பதில் பதிவு ஒன்றை முகநூலில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில்..

‘வலைப்பேச்சு’ அந்தணன் அண்ணன் அவர்களுக்கு… அதே அன்பும், மரியாதையுமாய் வணக்கங்கள்!
என்னைப் பற்றி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறீர்கள்.
அதன் சாராம்சம், “சில வருடங்களுக்கு முன் நடு ராத்திரி 3 மணிக்கு என் வீட்டுக்கு வந்து, வந்த குடிகாரன் டி.வி.சோமு, இரண்டாயிரம் கேட்டான். ஜன்னல் வழியாக கொடுத்து அனுப்பினேன்” என்பதுதான்!
சினிமா செய்திகளை எழுதுவது/ பேசுவது போலவே, உண்மையோடு பொய்யை நிறைய கலந்துள்ளீர்கள். வழக்கம்போல சுவாரஸ்யமான எழுத்து! ரசித்துப் படித்தேன். பாராட்டுகள்.
நீங்கள் எனக்கு ரூ.2000 கடன் அளித்தது உண்மை.. ஆனால், கால நேரம் உட்பட அனைத்தும் பொய்.
நான் உங்களிடம் பணம் கடன் வாங்கியது, சில வருடங்களுக்கு முன் அல்ல. பற்பல வருடங்களுக்கு முன். (நான் குடியை முழுதாய் விட்டு சில வருடங்கள் ஆகிவிட்டன என்பது உங்களுக்கு(ம்) தெரியும்!)
தவிர, சம்பவம் நடந்த போது நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை. தொலை பேசினேன். அதுவும், சூரியன் கொளுத்தும் பட்டப்பகலில்!
சம்பவம் நடந்த காலத்தை, நேரத்தை (சுவாரஸ்யத்துக்காக?) மாற்றிவிட்டீர்கள்! 🙂
அதே போல, ஒரு விசயத்தை மறந்துவிட்டீர்கள். தங்களிடம் கடன் வாங்கிய இரு மாதங்கள் கழித்து நான் பணத்தைத் திரும்பித் தந்ததை!
பற்பலவருடங்கள் முன் நீங்கள் செய்த உதவியை இன்றும் நான் சொல்லி வருகிறேன். அவர்களில் சிலர் இன்று எனக்கு அலைபேசினார்கள்:
“வெகு காலத்துக்கு முன் நடந்த இந்த சம்பவத்தை கூறி, அந்தணன் அவர்களை புகழ்வீர்களே… பணத்தையும் திருப்பித் தந்துவீட்டீர்களே… இப்போது இப்படி பதிவிட்டு இருக்கிறாரே…: என்றனர். ( அவர்களில் அண்ணன் V.k. Sundar அவர்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். காரணம்,  அதற்குக் காரணம் உண்டு!)
அந்தணன் அண்ணே… சில மாதங்களுக்கு முன், சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நாம் சந்தித்துக்கொண்டோம். அப்போது, உங்களை வைத்துக்கொண்டே, இந்த நிகழ்ச்சியை பல நண்பர்களுக்கும் அதே நெகிழ்ச்சியுடன் சொன்னேன்.
நீங்கள், “அட.. விடுங்க… விடுங்க..” என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். நான் உங்கள் கையைப் பிடித்து நிற்கவைத்து, முழுதும் சொல்லிய பிறகே நீங்கள் செல்ல அனுமதித்தேன். இது அங்கிருந்த நண்பர்களுக்குத் தெரியும்.
ஏன், உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்!
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (மேயராக இருந்தபோது), வைகோ அவர்கள், ராமதாஸ் அவர்கள், ஜி.கருப்பையா அவர்கள், நல்லகண்ணு அவர்கள், அன்புமணி ராமதாஸ் அவர்கள்… இப்படி பல்வேறு ஆளுமைகளை ஒன் டூ ஒன் (ப்ரஸ் மீட் அல்ல) பேட்டி கண்டு இருக்கிறேன். அனைவரிடமும் – மக்களின் பார்வையில் – நேர்மைத்திறத்துடன் கேள்விகளை வைத்து பதில் பெற்று இருக்கிறேன்.
தமிழ் இதழியலில் முதன் முறையாக, பிச்சைக்கரர்கள் பற்றி – அவர்களுடன் சுற்றி வந்து – ஆராய்ந்து கட்டுரை எழுதி இருக்கிறேன்..
சாதி, மத கலவரம் நடந்த பகுதிகளில் நேரடியாக சென்று செய்தி சேகரித்து இருக்கிறேன்…
கைவசம் துப்பாக்கிகள் இருந்தும், பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பயன்படுத்தாமல் மடிந்த தோழர் தமிழரசன் செயல், சாதி வெறி குறைந்த மகிழ்ச்சியும், விவசாயம் அரிதான துக்கமுமாக வாழும் கீழ்வெண்மணி பகுதி மக்கள், இறந்தவரின் ஜாதகத்தை கணித்து சிக்கிக்கொண்ட சோதிடர்கள் என்று பற்பல பேட்டிகள்…
நன்கு படித்தும் பண வசதி இல்லாமல் தவித்த மாணவர்கள் குறித்து நான் பத்திரிகையில் எழுதி அதன் மூலம் அவர்கள் உயர் கல்வி பயின்றது..
இப்படி மக்களுக்கான செய்திகள், பேட்டிகள், கட்டுரைகள் என்பதையே குறிக்கோளாக வலம் வந்து இருக்கிறேன்.
இதையெல்லாம் மனநிறைவாக உணர்கிறேன்.
உங்களுக்கு, நான் மது அருந்திய காலம்தான் நினைவில் இருக்கிறது. (நெசமா, நீங்கதான் காந்தி போல!)
தவிர, பற்பல வருடங்களுக்கு முன் நான் குடிகாரனாகத் திரிந்ததையும், அதிலிருந்து முழுமையாக மீண்டதையும் நானே பலரிடம் சொல்லி இருக்கிறேன். முகநூலிலும் பல முறை வெளிப்படையாக எழுதி இருக்கிறேன்.
குடிப்பழக்கத்தை நோக்கிச் செல்லும் மனநிலையில் உள்ளவர்கள் அதைத் தவிர்க்கவும், அந்த பழக்கம் உள்ளவர்கள் விலக முயற்சிக்கவும் எனது பதிவுகள் உதவி இருக்கின்றன.
உங்களின் இந்த பதிவும் (பொய்கள் பல கலந்திருந்தாலும்), குடிகார்களை சிந்திக்க வைக்கும்.
அந்த வகையிலும் உதவி செய்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
சரி.. உங்களுக்கு ஏன் என் மீது இம்புட்டு கோவம்?
அதையும் உங்கள் பதிவின் கடைசியில் சொல்லி இருக்கிறீர்கள்:
“வலைப்பேச்சு யு டியுப் குழுவினரான எங்களை, பணம் கேட்டோம் என்று கேவலப்படுத்திய நடிகர் யோகிபாபுக்கு ஆதரவாக பொங்கிக் கொண்டு இருக்கிற நபரும் இவ(ன்)ர்தான்” என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
உங்கள் ஆத்திரத்துக்கான காரணம் புரிகிறது.
ஆனால் நீங்கள் உட்பட வலைப்பேச்சுக் குழுவினர் மீதான எனது விமர்சனத்துக்கு – அந்த வீடியோவில் நான் கேட்ட கேள்விகளுக்கு- இது பதில் இல்லையே..!
நீங்கள் மீண்டும் பார்ப்பதற்காக, அந்த வீடியோ லிங்க்கை கொடுத்து இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்த்து, இதற்கு பதில் அளிக்க முயற்சியுங்கள்.
நன்றி அண்ணே!
என்றும் அன்புடன்,
– டி.வி.சோமு
( பின் குறிப்பு 1: நீங்கள் என்னை முகநூலில் தடை செய்துவிட்டதால், உங்கள் பதிவு எனக்குத் தெரியவில்லை. தடையை நீக்குங்கள். உங்கள் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
நாம் பதில் சொல்லிக்கொள்ளவும் வசதியாக இருக்கும்.
பின் குறிப்பு 2: வேறு சில நண்பர்களுக்கு நான் கொடுத்த கடன்கள் பல திரும்ப வரவே இல்லை. நான் வாங்கிய கடனை ஒரு சில மாதங்களில் திருப்பித்தருவேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக விபத்து காரணமாக, பொருளாதார முடக்கம். முழுதாக அடைக்க முடியவில்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக – கொஞ்சம் பேருக்கு, திருப்பித் தர ஆரம்பித்து இருக்கிறேன். உங்களால் முடிந்தால் ஐந்து லட்ச ரூபாய் கொடுங்கள். மற்றவர்களுக்கு விரைவில் கொடுக்க வசதியாக இருக்கும்.
அதைவிட முக்கியம்… இந்தப் பணத்தையும் நான் திருப்பித் தந்த பிறகுகூட, ஏதோ ஆத்திரத்தில் பொய்கள் கலந்து ஏதாவது பதிவிடுவீர்கள். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்! (இந்த முறை போல, இரவு மூன்று மணிக்கு அரைத்தூக்கத்தில் முக்கால் இருட்டில் பளிச்சென்று அழுக்கு சட்டை தெரிந்தது என லாஜிக் இல்லாமல் திரைக்கதை எழுதாதீர்கள். சில அப்பாவிகளைத்தவிர வெகுபலர் நம்ப மாட்டார்கள். 🙂 
பின் குறிப்பு 3: தரம் தாழ்ந்து பேசாதீங்கண்னே.. உங்களுக்கு செட் ஆகலை!
படக்குறிப்பு: அந்தணன் அண்ணன் அவர்கள் எனக்கு கடன் கொடுத்ததையும்.. நான் திருப்பித் தரும் – இரு மாதங்கள் – வரை அது குறித்து கேட்காததையும் குறிப்பிட்டு அவரை வைத்துக்கொண்டே சில நண்பர்களிடம் சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் சொன்னேன் அல்லவா.. அது நடந்த சில நிமிடங்களில் எடுத்த படம்..)

வலைப்பேச்சு – யோகிபாபு – அஜித் விவகாரம் குறித்து நான் ( டி.வி.சோமு)  பேட்டி கொடுத்த வீடியோ…