விளைவுகளை சந்திப்போம் என்பதா?: அமைச்சர் சேகர் பாபுவுக்குக்கு வ.கவுதமன் கண்டனம்

விளைவுகளை சந்திப்போம் என்பதா?: அமைச்சர் சேகர் பாபுவுக்குக்கு வ.கவுதமன் கண்டனம்

வடலூர், சத்திய ஞான சபையில் அமையவிருக்கும் வள்ளலார் சர்வதேச மையத்துக்கு எதிர்ப்பு எழுந்தால் சந்திக்கத் தயார் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதாக, திரைப்பட இயக்குநரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான

வ.கவுதமன் தெரிவித்து உள்ளார்.

`வள்ளலாரின் கருத்துகளைப் பரவலாக்கும் விதமாக, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டு இருந்தது. அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அது குறித்த ஆணை வெளியிடப்பட்டு, ரூ.99.9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தக் கட்டுமானங்களுக்காக சத்திய ஞான சபை வளாகத்தில் இருக்கும் பெருவெளி தேர்வுசெய்யப்பட்டது. (சத்திய ஞான சபை, தருமசாலை, அருட்பெருஞ்சோதி மண்டபம் தவிர்த்து, மீதமிருக்கும் திறந்த வெளியே `பெருவெளி’ என்று அழைக்கப் படுகிறது.)சர்வதேச மையம் அமைக்க ஆய்வுகள், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், பெருவெளி பகுதியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு சேகர் பாபு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர், ‘‘அருட்பெருஞ்ஜோதியை தரிசிப்பதற்காக, லட்சக்கணக்கானோர் கூடும் இடம் பெருவெளி. ஆகவே. வடலூரிலேயே வேறு ஓர் இடத்தில் அதை அமைக்க வேண்டும்” என்றார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர்

வ.கவுதமன் போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த 17-ம் தேதிx வள்ளலார் சர்வதேச மையத்துக்கு முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டுவார் என்ற அறிவிப்பு வெளியானது.

அதற்கு எதிராக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 16-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘சத்திய ஞான சபையில் பெருவெளி அமைக்கப் பட்டு, ஏழு ஆண்டுகள் வரை வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க மறுத்த வள்ளலார், `இன்னும் பல ஆண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதனால், பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதனால், சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்க வில்லையென்றால், மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க முன்னெடுக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், 17-ம் தேதி நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிலையில், சத்திய ஞான சபை வளாகத்துக்கு வெளியில் பா.ம.க தொண்டர்கள் குவிந்ததால், அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. ஆனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 1,500 போலீஸார், அசம்பாவிதம் நிகழாமல் பார்த்துக்கொண்டனர்.

இதற்கிடையில் காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒரு பக்கம் எதிர்ப்பு நிலவ, இன்னொரு பக்கம் ஆதரவும் எழுந்திருக்கிறது.

வள்ளலார் வழியைப் பின்பற்றும், `தெய்வீக பக்தர்கள் பேரவை’யின் தலைவருமான ஜெமினி என்.ராதா, ‘‘வள்ளலாரின் சித்தாந்த நெறிமுறைகள் உலக அளவில் மக்களைச் சென்றடையும். வள்ளலார் சர்வதேச மையத்துக்கு உள்ளூர் மக்களும் பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, இதை எதிர்ப்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும்,  ‘‘சன்மார்க்க அன்பர்களின் நீண்டகாலக் கோரிக்கையின் அடிப்படையிலேயே , `வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.  கடந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே, அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகப் பலகட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தினோம். அதில் கலந்து கொண்ட பொதுமக்களும் சன்மார்க்க அன்பர்களும், `இது அவசியமான ஒன்று’ என்று 100% ஆதரவு தெரிவித்தார்கள். எவரும்  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பா.ம.க மட்டும்தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறது. எந்த விதத்திலும் ஜோதி தரிசனம் பாதிக்காத அளவுக்குத்தான், கட்டமைப்புகள் திட்டமிடப் பட்டு இருக்கின்றன. இது குறித்த சரியான புரிதல் இல்லாத சிலர் தவறாகக் கூறியதை வைத்துத்தான் மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். உண்மையில் சன்மார்க்க அன்பர்கள் இதில் எந்த வகையிலும் பாதிக்கமாட்டார்கள்.

ஓர் ஆண்டு முழுவதும் வள்ளலாருக்கு விழா எடுத்திருக்கிறோம். அவரின் கொள்கைகளையும் கருத்துகளையும் உலக அளவில் எடுத்துச் செல்வதுதான் எங்கள் அரசின் நோக்கம்” என்றார்.

இந்த நிலையில்  தமிழ்ப் பேரரசு கட்சி  பொதுச் செயலாளர்  வ.கௌதமன்  தனது பேஸ்புக் பதிவில், தெரிவித்துள்ளதாவது:

“வள்ளலார் திருஞான சபைக்கு என்று ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட 46 ஏக்கரில் அல்லது அரசு புறம்போக்கு இடத்தில், சர்வதேச மையத்தை கட்டுங்கள். திருஞான சபையை மறைக்கும் விதத்தில் கட்டினால் கடுமையாக எதிர்ப்போம்.

அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பகிரியில் [வாட்ஸ் அப்] ‘வடலூர் வள்ளலார் இடத்தில்  அரசு அத்துமீறினால்  மிகக் கடுமையான பின்விளைவுகளை  சந்திக்க நேரிடும் – எச்சரிக்கும் கவுதமன்’ என்று செய்தி அனுப்பினேன்.

அதற்கு அவர், ‘விளைவுகளைச் சந்திக்க அரசு தயார்’ என்று பதில் அனுப்பி உள்ளார்.

இதற்கு மேலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருந்தால் அது முதலமைச்சர் அவர்களையே மொத்தமாக வந்து சேரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வ.கவுதமன் பதிவிட்டு உள்ளார்.

 

 

Related Posts