“உயிர் தமிழுக்கு” விமர்சனம்

“உயிர் தமிழுக்கு” விமர்சனம்

கேபிள் டிவி நடத்தும் இளைஞர் பாண்டியன்,, தமிழ் செல்வி என்ற பெண்ணை அதி தீவிரமாக காதலிக்கிறார். அந்த பெண்ணுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.

தமிழ்ச் செல்வியின் அப்பா, அரசியல்வாதி. ஆகவே பாண்டியனும் அரசியலுக்கு வருகிறார். ஆளுக்கொரு கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்ச் செல்வியின் தந்தை கொல்லப்படுகிறார். கொலைப்பழி, பாண்டியன் மீது விழுகிறது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.தமிழ்ச் செல்வியும், தனது தந்தையை கொன்றது பாண்டியன்தான் என நினைத்து வெறுக்கிறார்.

இந்த நிலையில் உண்மைக் குற்றவாளிகளை பிடிக்க முயற்சிக்கிறார் பாண்டியன். அவரது முயற்சி வெற்றி பெற்றதா, காதல் கைகூடியதா என்பதே கதை.

பாண்டியன் என்கிற இளைஞராக அமீர் தோன்றுகிறார். ஜாலியான அரசியல்வாதியாக வந்து ரசிக்க வைக்கிறார். அமீர் என்றாலே சீரிஸான மனிதர் என்ற தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ஈர்க்கிறார்.  காதல் காட்சிகளிலும், உடன் இருப்பவர்களை கிண்டலடிக்கும் காட்சிகளிலும் அதகளம் செய்கிறார்.

நாயகி தமிழ்ச் செல்வியாக வரும் சாந்தினி ஸ்ரீதரன், தனது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். காதல் காட்சிகளிலும் சரி, தனது தந்தையை கொன்றது காதலன் பாண்டியன் என்று நினைத்து பொங்கும் காட்சியிலும் சரி.. கவனத்தை ஈர்க்கிறார்.நாயகியின் தந்தையாக வரும் ஆனந்த்ராஜ், நாயகனின் தோழர்களாக வரும் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, மற்றும் ராஜ்கபூர் உள்ளிட்ட அனைவருமே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.. ரசிக்கவைக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது, இவிஎம் மிஷினால் தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைப்பது என சம கால அரசியலை கிண்டலடித்துள்ளார் இயக்குநர் ஆதம்பாவா.

உயிர் தமிழுக்கு என தலைப்பைப் பார்த்ததும், நாயகன் தமிழ் மொழிக்காக போராடுபவர்  என நினைத்துச் சென்றால், காதலி தமிழ்ச் செல்விக்காக உயிரையும் கொடுப்பவர் என படம் எடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் ரசிக்க வைத்து இருக்கிறார்கள்.

ஜாலியாக பார்த்து ரசிக்கக்கூடிய படம், உயிர் தமிழுக்கு.

 

Related Posts