ஈஷா அறக்கட்டளைக்கு  ஐ.நா வழங்கிய அங்கிகாரம்.!

கோவை; சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதை நடைமுறைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் அமைப்பானது ஈஷா அறக்கட்டளைக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கி கெளரவித்துள்ளது ஐ.நா சூற்றுச்சூழல் பேரவை.

இதன்மூலம், அதன் துணை அமைப்புகளில் ஈஷா அறக்கட்டளை பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை பெற்றுள்ளது. மேலும், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் குழுக்களின் சந்திப்புகளில் பங்கேற்பது, பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்கும் பணிகளில் ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.

இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நாவின் பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் கூட்டமைப்பு (UNCCD) ஈஷாவுக்கு தனது அங்கீகாரத்தை கொடுத்தது. இதையடுத்து, புதுடெல்லியில் நடந்த அவ்வமைப்பின் உச்ச மாநாட்டில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று உரையாற்றினார். இதேபோல், ஐ.நாவின் நீர், மண், கலாச்சாரம் சார்ந்த பல்வேறு அமைப்புகளில் சத்குரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அங்கும் அவர் பேசினார்.2019-ம் ஆண்டு நடந்த ஐ.நா பருவநிலை மாற்ற தடுப்பு மாநாட்டில் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளை பார்த்து ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் தங்களது அங்கீகாரங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக, சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP),ஈஷா அறக்கட்டளையை ஐ.நாவின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்க அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. நம் பூமிக்கு புதிய சுற்றுச்சூழல் விதியினை விழிப்புணர்வாய் படைப்பதற்கான நேரமிது. ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நதிகளை மீட்போம் இயக்கம் தற்போது 2 களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவேரி நதிக்கு புத்துயீரூட்ட தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘காவேரி கூக்குரல்’ திட்டமும், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ‘வஹாரி’ நதி புத்துயீரூட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.