பின்னணி இசை இல்லாத ‘டிராக்டர்’ படத்துக்கு மேலும்ஒரு அங்கீகாரம்!

பின்னணி இசை இல்லாத ‘டிராக்டர்’ படத்துக்கு மேலும்ஒரு அங்கீகாரம்!

பின்னணி இசை இல்லாமல், தமிழில் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் “டிராக்டர்”. வழக்கமான பின்னணி இசை சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக இயற்கையான சுற்றுப்புற ஒலியை பதிவு செய்தும் (Sync Sound) நடிகர்களின் வசனத்தை தளத்திலே பதிவு செய்தும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்திய மொழி திரைப்படங்களை பிரான்ஸ் நாட்டில் வெளியிடும்,  தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக  வெளியிட்டு வருபவர், ஜெயந்தன்.  பொழுது போக்கு படங்களை வெளியிடுவது இவரது தொழில் என்றாலும்,  கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களை தயாரித்து மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இவரது எண்ணம். இந்த எண்ணத்தை,  டிராக்டர் படத்தை தயாரித்ததன் மூலம் துவக்கி இருக்கிறார்.

படக்குழுவினர்

இந்த திரைப்படத்தின் ரமேஷ் யந்த்ரா இயக்கி உள்ளார். இவர், ஏற்கனவே “கூடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் கவனத்தை ஈர்த்தவர். சென்னை ஓவியக் கல்லூரியில் முதுகலை பயின்றவர். அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் ( ஐடி) நீண்ட காலம் பணியாற்றியவர்.

இயக்குனரைப்போலவே இந்தப் படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன்
மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள். படத்தில், பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் இயக்குனர் ராம்சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் முத்துசாமி, இவர்,பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் உதவியாளர்.

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ரமேஷ் யந்த்ரா – ஜெயந்தன்

சுதர்சன் படத்தொகுப்பாளராகவும், ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பிரபல கலை இயக்குனர் டி.முத்துராஜ் செய்துள்ளார்கள்.

தயாரிப்பாளர் ஜெயந்தனும், இயக்குநர் ரமேஷ் யந்த்ராவும், “டிராக்டர்” என்ற திரைப்படம் வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பவும் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது” என்கிறார்கள்.

இந்த டிராக்டர் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது,டிராக்டர் படத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் திரைப்பட குழுவின் திறமை மற்றும் உழைப்புக்கு ஒரு சான்று.

இந்த திரைப்படம் சர்வதேச பிரீமியர் அந்தஸ்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச் சென்றது.

இந்நிலையில் 12வது இந்தியன் சினி பிலிம் பெஸ்டிவல் மும்பையில்  வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. அதில் அலுவல் ரீதியாக  விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இது, டிராக்டர் படத்துக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு அங்கீகாரமாகும்.

விரைவில் இத்திரைப்படம், திரையரங்களில் வெளியாக உள்ளது.

(முகப்பு படம்: ‘டிராக்டர்’ படக்காட்சி ஒன்று…)