சீதா லட்சுமி விஜயின், ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு

சீதா லட்சுமி விஜயின், ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு

சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில்  சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக,’பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்’ என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது.

திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார்.திரைப்பட நடிகர்  ஒய்.ஜி.மகேந்திரா தலைமை ஏற்க,  நடனக் கலைஞர்  உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு ஆகஸ்ட் 31   தி.நகர் கிருஷ்ணகான சபாவில் 10வது முறையாக அரங்கேறியது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது.

நமது அடையாளத்தை நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக, அற்புதமான நாடகமாக, அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று
ஓய்.ஜி.மகேந்திரமகேந்திரா பாராட்டினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோயில், மிகப் புகழ் வாயந்தது. வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமான இது,  பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயில் இது.

மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள்  21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

தல வரலாறு
திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர்  தனது பட்டாபிசேகத்துக்கு அச்சிலையை இலங்கையிலிருந்து வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான்.

அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விஷணன்  மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான்.

பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும். இது, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் ஸ்ரீ ரங்கநாதராக காட்சியளித்து,  காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார்.  அதோடு,  விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.

இந்த ஸ்தல புராணத்தை சீதாலட்சுமி விஜய்,  தனது மாணவிகளுடன் மிகச் சிறப்பாக  நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். பார்வையாளர்கள் அனைவரும் நெகிழ்ந்து ரசித்தனர்.

Related Posts