சிறு, குறு தொழில் துறை மின்சார நிலைக் கட்டண முறைகளில் மாற்றம்!: முதலமைச்சர்  உத்தரவு

சிறு, குறு தொழில் துறை மின்சார நிலைக் கட்டண முறைகளில் மாற்றம்!: முதலமைச்சர்  உத்தரவு

பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை சிறு குறு நூற்பாலைகள் தெரிவித்து வந்தன.

இக்கோரிக்களை வலியுறுத்தி நாளை (செப்.25-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக திருப்பூர் தொழில்துறை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வரின் புதிய உத்தரவு தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களது நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட முதல்வர் அறிவுறுத்தினார்.

இதன்படி, TANGEDCOவிற்கு ஆண்டிற்கு ரூ.2,000 கோடி வருவாய் குறைந்தாலும், தொழில்முனை வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.100 லிருந்து ரூ.75 என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.  50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் , 112 கிலோவாட், அதற்கு மேல் என வரையறை வைத்து, கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான (LT IIIB) உச்சநேர (பீக் ஹவர்) நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 குறைத்து ஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமிழக அரசு வழங்குகிறது. இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்ததமிழக முதலமைச்சர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதன்படி 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 ரூ லிருந்து 2.18 ரூ ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் தற்போது மின்சார நிலைக் கட்டணம் தொடர்பான ஆணை வெளியாகியிருந்தாலும் பீக் ஹவர் சலுகை அறிவிக்கப்படாததால் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது.