சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு: மனித நேய மாணவர்கள் வெற்றி
நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் வருடம்தோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டுகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி நடப்பாண்டு 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலைத் தேர்வெழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 79 நகரங்களில் கடந்த ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பேர் வரை எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை உட்பட 5 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 25 ஆயிரம் பேர் வரை எழுதியதாக தெரிகிறது.இந்நிலையில் முதல்நிலை தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் www.upsc.gov.in, www.upsconline.nic.inல் சென்று அறிந்து கொள்ளலாம்.
முதல்நிலை தேர்வில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 650 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந் தாண்டு தமிழகத்தில் சுமார் 700 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.
“இவர்களில், மனிதநேயம் பயிற்சி மையத்தில் பயின்ற 42 பேர் வெற்றி பெற்று உள்ளனர்” என்று சென்னை பெருநகர முன்னாள் மேயரும் மனித நேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி தெரிவித்தார்.