ஆம்ஸ்ட்ராங் கொலை! காரணம் இதுதானா?

ஆம்ஸ்ட்ராங் கொலை! காரணம் இதுதானா?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.
2006ம் ஆண்டு, உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரானார்.
பட்டியல் இன மக்களின் உரிமைக்காக பேசி வந்தார். குறிப்பாக அந்த இன இளைஞர்களுக்கு கல்வி உதவி என்றால் வாரி வழங்கியவர்.
பா.ஜ.க. சீமான் போல, திராவிட அரசியலை எதிர்த்தவர் ஆம்ஸ்ட்ராங்.  பா.ம.க. மீதும், அதன் நிறுவனர் ராமதாஸ் மீதும் தனி பாசம் வைத்து இருந்தார்.  “வன்னியர் பறையர் மோதல் என ஆரிய கைக்கூலிகள் திட்டமிட்டு பரப்புகிறார்கள். ராமதாஸ் நல்லவர்” என்று பல கூட்டங்களில் பேசி இருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் (தமிழ்நாட்டில்) இவர் சார்ந்த பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிட்டது.
2008ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்குள் சாதி ரீதியான கலவரம் நடந்தது அல்லவா… அந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் மீதும் வழக்கு பதியப்பட்டது. அவர் தலைமைறைவானதாக காவல்துறை சொன்னது.
இதற்கிடையே தேர்தலில் அவர் போட்டியிட, இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 2012ல் கைது செய்யப்பட்டார். பிறகு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2009ம் ஆண்டு, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில், சென்னை கேங்ஸ்டர்கள் பட்டியலில் ஆர்ம்ஸ்ட்ராங்கும் இருப்பதாக கட்டுரை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஆம்ஸ்ட்ராங்.
இந்த வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பில், செய்தி வெளியானபோது ஆசிரியர் பொறுப்பு வகித்த சுனில் நாயர், செய்தியாளர் செல்வராஜ், வெளியீட்டாளர் நாராயணன் ஆகியோருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டுக்காக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி விவகாரங்களில் ஆம்ஸ்ட்ராங் பெயர் அடிபடும். அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உண்டு.
எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து உண்டு என்பதை அவர் அறிந்தே இருந்தார். தன்னைச் சுற்றி குறைந்தது பத்து பேரை எப்போதும் பாதுகாப்புக்காக வைத்து இருப்பார். தவிர, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருந்தார்.
அவரது உயிருக்கு ( கூடுதல்) ஆபத்து என உளவுத்துறை எச்சரித்தாகவும், “என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆம்ஸ்ட்ராங் சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் உலவுகின்றன.
அவரது கொலைக்கும் ஆருத்ரா நிறுவன மோசடிக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
“ஆருத்ரா என்கிற நிதி நிறுவனம், 1,09,255பேரிடம் ரூ.2,438 கோடி வரை ஏமாற்றியது அல்லவா… ஏமாந்த சிலருக்கும் அந்த நிதி நிறுவனத்துக்கும் இடையில் நின்று பணத்தை பெற்றுத் தந்தார் ஆம்ஸ்ட்ராங்.
இந்த விவகாரத்தில் அவருக்கும் ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடிக்கும் மோதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு, பட்டினப்பாக்கம் கடற்கரையில் வைத்து ஒரு கும்பலால் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்” என்கிறார்கள்.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எட்டு பேர் சரணடைந்துள்ளனர். இவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் ஒருவர்.
– டி.வி.சோமு
(படத்தில்: ஆம்ஸ்ட்ராங் – ஆற்காடு சுரேஷ்)