தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை செய்யப்படாமல் தடுக்க, இதை செய்ய வேண்டும்!
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிடம்’ என்ற வார்த்தையை விட்டுவிட்டது பெரிய விசயமா?
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது” என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.
திராவிடத்தின் மீது அவருக்கு இருக்கும் ஒவ்வாமை அறிந்ததுதான்!
அதே நேரம், இந்திய தேசிய கீதத்தில், ( ‘ஜன கண மன…’வில்) ‘திராவிட ..’ என்ற வார்த்தை வருகிறதே. இவர் ஆட்சிக்கு வந்தால் அதையும் நீக்குவதாக பேசுவாரா?
“முதலமைச்சரானால், தமிழ்நாட்டுக்கு என்று கிரிக்கெட் அணியை துவக்கி இந்தியாவுடன் மோத வைப்பேன்.. தமிழ்நாட்டுக்கு என கடற்படையை உருவாக்கி இலங்கையுடன் போரிடுவேன்..” என்றெல்லாம் வரம்பற்ற அதிகாரம் கொண்டு (!) பேசும் சீமான் அவர்கள், இதையும் பேசலாமே!
ரவி – சீமான்
நிகழ்வு ஒன்றில், காஞ்சி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார். அதே நிகழ்வில், தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்றார். அதற்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்திருக்கலாமே!
திராவிட ஒவ்வாமை கொண்ட ஆளுநர் ரவியும்கூட, தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தையை விட்டுவிட்டு பாட உத்தரவிடலாமே!
மூவருமே.. ஏன் எவருமே… அப்படிச்செய்ய மாட்டார்கள்..! காரணம், இந்திய தேசிய கீதத்தை அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்த அச்சம்தான், தேசிய கீதத்துக்கு இவர்கள் மரியாதை அளிக்க காரணம். இதை பி.பி.சி. தமிழ் அம்பலப்படுத்தியது.
விஜயேந்திரர் விவகாரம் குறித்த கட்டுரையில் வரும் ஒரு பகுதிஇது..
‘பி.பி.சியிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றார். “மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள். இது எங்கள் சம்பிரதாயம்” என்றும் தெரிவித்தார்.
‘தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே’என்ற கேள்விக்கு, “தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்” என்று கூறிய அந்த நிர்வாகி’ – இப்படி போகிறது அந்த கட்டுரை. ( நன்றி: பி.பி.சி. தமிழ்)
காஞ்சி விஜயேந்திரர்
இன்னொரு விசயமும் இதை உறுதிப்படுத்தியது.
காஞ்சி விஜயேந்திரர் ‘தியானத்தில்’ அமர்ந்திருந்த விவகாரம் குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு வந்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவு இல்லை ” என்று தீர்ப்பளித்தார்.
அவர் தீர்ப்பளித்த அடுத்த வாரமே, தமிழ்த்தாய் வாழ்த்தினை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்த தமிழ்நாடு அரசாணை, ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, (மாற்றுத் திறனாளிகள் தவிர) அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்” என்றது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதே நேரம், “தமிழ்த்தாய் வாழ்த்தில் வரிகளை விட்டுப் பாடி அவமரியாதை செய்வார்கள்…”என்று அவரும்.. எவரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அது நடந்துவிட்டது.
ஆகவே, தேசிய கீதத்தைப் போலவே, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்தால், அவமதித்துப்பேசினால் தண்டனை என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.
சிலர், ‘பெரியாரும்தானே தமிழ்த்தாய் வாழ்த்தை விமர்சித்தார்’ என்று கேட்பார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை விமர்சித்தே கூட்டத்தில்… அவ்வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றவர் பெரியார். (விவரமாக அறிய முந்தைய tamilankural.com கட்டுரையை படியுங்கள்)
– டி.வி.சோமு