தமிழை – தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்தாரா தந்தை பெரியார்?

தமிழை – தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்தாரா தந்தை பெரியார்?

தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்வில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்..’ என்ற வார்த்தைகள் பாடாமல் விடப்பட்டுள்ளன.

இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சமூகவலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“தொடர்ந்து திராவிடம் என்கிற கருத்தியலை – வரலாற்றை இழிவு செய்து வருகிறார் ஆளுநர் ரவி. குறிப்பிட்ட நிகழ்வில் திராவிடம் என்பது உள்ளிட்ட வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டது. இது திட்டமிட்ட செயல். இதற்கு ரவியே காரணம்” என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிலர், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தின் ஒரு பகுதியை பதிந்து, “பெரியாரே தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்த்து இருக்கிறாரே” என்று பதிவிடுகின்றனர்.பெரியார் என்ன, எங்கே, எப்போது அப்படி பேசினார்?

1971ம் வருடம் ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடக்கிறது. அந்தக் கூட்டத்தில்தான் தந்தை தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து கருத்து தெரிவிக்கிறார்.

“மொழியை ஒரு கருவியாகப் பார்க்க வேண்டும். அவ்ளவுதான். அதற்கு உருவகம் கொடுத்து புனிதப்படுத்துவது தேவையில்லை. ஆகவே, கடவுளைக் கற்பித்தது போலவே இதுவும் முட்டாள்தனம்தான்” என்பதே பெரியார் அவர்கள் பேசியதன் சுருக்கக் கருத்து.

இறுதி வரை அந்த கருத்தில் உறுதியோடு இருந்தார்.

அப்படி , அவ்வாறு பேசிய கூட்டம் துவங்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தள்ளாத வயதிலும் எழுந்து நின்றார் பெரியார்.

ஆம்… கடவுள் என்கிற கற்பிதத்தையோ, மொழிக்கு உருவகம் கொடுப்பதையோ அவர் ஏற்கவே இல்லை. ஆனாலும் பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், மொழி வாழ்த்துப் பாடினாலும் எழுந்து நிற்கத் தவறியதே இல்லை.தமிழ் சார்ந்து இன்னொரு விமர்சனமும் பெரியார் மீது காலம் காலமாக சிலரால் வைக்கப்படுகிறது.

அது.. “தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசினார் பெரியார்” என்பது.

இது குறித்து பெரியார் என்ன சொன்னார்?

“திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தின்இ அடிப்படை பழக்கவழக்கங்களை மறந்துவிட்டனர். அதனை ஒரு தரப்பினர் மறைத்துவிட்டார்கள். இப்போது தமிழர்கள் கொண்டாடும் அனைத்துக் கலாச்சாரங்களும் அவர்களை அடிமைச் சமூகமாக நிறுவவே உதவி செய்கின்றன. அறுவடை தவிர்த்து பிற பண்டிகைகள் எல்லாம் நாம் அடிமைப்பட்டிருக்கும் காட்டுமிராண்டி தன்மைக்கே வழிவகுக்கின்றன. இதனால் அடிமைத்தனத்தைவிட்டு வெளிவர சாதி இழிவை வளர்க்கும் கலாச்சாரங்களை பின்பற்றாதீர்கள்”. இதுதான் 1970-ல் பெரியார் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்.

“நம்மில் சிலர் பணம் பதவிக்கு ஆசைப்பட்டு சாதி இழிவுக்குத் துணை போகிறார்கள். இதை லட்சியம் செய்யாமல் புராண மாயையில் மூழ்கிக்கிடக்கிறோம்” என, 1943-லேயே கட்டுரை எழுதினார்.

ஆம்.. அடிமைப்பட்டு இருப்பது காட்டுமிராண்டித்தனம் எனப் பல சமயங்களில் பெரியார் சொன்னதுதான் இப்படி வேறுவிதமாக திரிக்கப்பட்டது.

தவிர தமிழ் உள்ளிட்ட எந்த மொழியையும் அவர் எதிர்த்ததில்லை. புனிதமாகவும் கொண்டாடியதில்லை.

தமிழை ஒடுக்கி இந்தி, சமஸ்கிருதம் ஆதிக்கம் செய்வது.. அதன் மூலம் தமிழர்கள் ஒடுக்கப்படுவது கண்டு பொறுக்க முடியாலேயே இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்தார்.

மற்றபடி எந்தவொரு விசயத்தின் மீதும் அவருக்கு வெறுப்போ விறுப்போ இருந்ததில்லை.

அவர் பெயரைச் சொன்னாலே எல்லோருக்கும் கடவுள்தான் நினைக்கு வருவார்.. அதாவது கடவுள் மறுப்பு.

ஆனால் கடவுள் மீதுகூட அவருக்கு வெறுப்பு இல்லை.

இதை அவரே சொல்லி இருக்கிறார்… கேளுங்கள்..!

“இல்லாத கடவுளை வைத்துக்கொண்டுய எப்படியெல்லாம் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைச் சொல்லவே தொடங்கினேன்!” என்றார்.

மக்கள் ஏமாற்றப்பட்டால்.. அவர்களது சுயமரியாதைக்கு இழுக்கு நேர்ந்தால் அவர் கொதிப்பார்.. போராடுவார்..! மற்றபடி வேறெந்த விசயம் மீதும் அவருக்கு வெறுப்பு கிடையவே கிடையாது.

மக்களினஅ முன்னேற்றத்துக்காகத்தான் ஆங்கிலத்தை ஆதரித்தார். ஆங்கிலம் கற்றால் அறிவு மற்றும் பொருளாதாரத்தில், தமிழர்கள் மேம்பட முடியும் என்பதை உணர்ந்தார். ஆகவே ஆங்கிலம் கற்பதை ஆதரித்தார்.

இன்னொரு புறம் ஆங்கிலம் போல தமிழில் அறிவியல் கருத்துக்கள் இல்லையே என்கிற ஆதங்கமே அவருக்கு இருந்தது. தமிழ் மொழி மேம்பட வேண்டும் எனவும் எண்ணினார். தமிழினை விஞ்ஞானத் துறையில் புகுத்தி புதுமைகள் படைக்கவே விரும்பினார். அதற்கு யாரும் செவி சாய்க்காததால் பழமையைக் கட்டி அழும் மொழி என்று தமிழ் மொழியை விமர்சனம் செய்தார்.

அதே நேரம், மொழி சீர்திருத்தமே தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று தொடர்ந்து பெரியார் வலியுறுத்தி வந்தார். அதை அமலுக்கும் கொண்டு வந்தார். பிறகு தமிழ்நாடு அரசு அதை ஏற்றது. (பெரியார் கொண்டு வந்த மொழிச்சீர்திருத்த்தைத்தான் நாம் பின்பற்றி வருகிறோம். அது என்ன என்பதுகூட பலருக்குத் தெரியாது.)

உண்மையில் தமிழை, தமிழ்த்தாயை இழிவுபடுத்துபவர்கள் யார்?

தமிழில் பேசினால் ‘தீட்டு’, தமிழில் பாடினால் ‘தீட்டு’, தமிழில் அர்ச்சனை செய்தால் ‘தீட்டு’ என்றவர்கள் – என்பவர்கள் யார் என்பதை சிந்தியுங்கள் மக்களே.

காஞ்சி சங்கராச்சாரியார்களும் அவர்களது ஆட்களுமே..

2018ல்கூட ஒரு சம்பவம்..

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தவர் சங்கராச்சாரியார்தான்..

இதோ இப்போது, தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பிட்ட வரிகளை நீக்கி அவமரியாதை செய்தவர்களும் ‘அவர்களே..’

ஆனால் தமிழுக்கு – தமிழர்க்கு இறுதிவரை எந்தவித சுயநலமின்றி உழைத்த பெரியாரை அறியாமல் – வரலாறு அறியாமல்…. தமிழுக்கு – தமிழர்க்கு எதிராக செயல்படுபவர்களோடு இணைத்துப் பேசுகிறார்கள் சிலர்.

இவர்கள் உண்மை வரலாற்றை அறிய… நமது நட்பு சக்தி யார்.. எதிர் சக்தி யார் என்பதை உணர.. தேடித்தேடி பல புத்தகங்களைப் படிக்க வேண்டிய சிரமம் இப்போது இல்லை.

கூகுள் இருக்கிறது.

தமிழ் – பெரியார், தமிழ்த்தாய் வாழ்த்து – பெரியார்… என்று தட்டச்சினால் போதும்..

தமிழ் நீீச பாசை, கோயில் அர்ச்சனை தமிழ்… இப்படி எல்லாம் தட்டச்சினால் போதும்…

உண்மை வரலாறை அறிந்து தெளியலாம்.

என்னவொன்று உங்கள் பொன்னான நேரத்தை கொஞ்சம் ஒதுக்க வேண்டும்.. அவ்வளவுதான்!

– டி.வி.சோமு

 

 

 

 

 

 

Related Posts