தில்ராஜா: விமர்சனம்

தில்ராஜா: விமர்சனம்

’சாக்லேட்’, ’பகவதி’, ’ஏய்’, ’வாத்தியார்’, ’மாஞ்சா வேலு’, ’மலை மலை’, ’கில்லாடி’ என தொடர்ந்து பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் அதிரடி ஆக்‌ஷன் கமர்ஷியல் படம் ‘தில்ராஜா’.

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio) நிறுவனம் சார்பில் கோவை பாலா  தயாரித்திருக்கும் இந்த படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடித்திருக்கிறார். ஷெரின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.விஜய் சத்யா –  ஷெரின் தம்பதியினருக்கு ஒரு குழந்தை மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.   ஒரு நாள் இரவு மூவரும் வெளியில் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள்.  போதை இளைஞர்கள் நான்கு பேர் காரை வழி மறிக்கிறார்கள். ஷெரீனிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.  அவர்களை விஜய் சத்யா தடுத்து சண்டை இடுகிறார்.

அந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் மரணடைகிறார். மீதி மூன்று பேரை காணவில்லை. மரணடைந்தவர், அமைச்சரின் மகன்.

அந்த அமைச்சரிடமே ஒரு வேலைக்காக செல்கிறார் விஜய் சத்யா. ஒரு கட்டத்தில் விஜய் சத்யாதான் தன் மகனை கொன்றார் என்பது அமைச்சருக்குத் தெரிய வருகிறது.

உயிர் பிழைக்க குடும்பத்துடன் ஓடுகிறார் விஜய் சத்யா

அவர் தப்பித்தாரா, பிறகு என்ன நடந்தது என்பதுதான் விறு விறுப்பான கதை.

விஜய் சத்யா மிரட்டி இருக்கிறார். ஆஜானுபாகுவான சிக்ஸ் பேக் உடலமைப்பு. அதிரடியாக சண்டை போடுகிறார். மனைவி, குழந்தையிடம் பாசம் காட்டும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து நெகிழ வைக்கிறார்.

குடும்பத் தலைவியாக – ஒரு குழந்தைக்குத் தாயாக வருகிறார் ஷெரின். கணவன், குழந்தை மீது பாசம் காட்டுவது, போதை இளைஞர்களிடம் சிக்கித் தவிப்பது என சிறப்பாக நடித்து உள்ளார்.

வில்லனாக இயக்குநர் வெங்கடேஷ், அதிரடியான அரசியல்வாதியை கண் முன் நிறுத்துகிறார். அவரது மனைவியாக வரும் வனிதாவும் வில்லியாக  அசரவைக்கிறார். இமான் அண்ணாச்சி,  விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

அம்ரீஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.

மனோவி.நாராயணாவின ஒளிப்பதிவு அசரடிக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது.

திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் கலந்த வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்.  அதே நேரம்,  நாயகனை ரஜினி ரசிகராக காண்பித்தது, ரஜினி ரசிகர்கள் கிளைமாக்ஸில் உதவுவதாக காண்பித்தது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

மற்றபடி ரசிக்கக்கூடிய திரைப்படம்.

 

 

Related Posts