தேவரா: விமர்சனம்
கடற்கரையை ஒட்டிய நான்கு கிராமங்கள். அந்த கிராமங்களில் வாழ்ந்தவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள். ஆனால் நாடு விடுதலை அடைந்த பிறகு அந்த பகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், அந்த பகுதியினர், கடத்தல்
செய்பவர்களுக்கு உதவியாக கடலில் வரும் கப்பல்களிலிருந்து பொருட்களை கரைக்கு எடுத்து வர உதவி செய்து வந்தனர்.ஜுனியர் என்டிஆர் தலைமையில், சைப் அலிகான், கலையரசன், ஸ்ரீகாந்த் ஆகிய ‘தளபதிகள்’ இந்த பணியை செவ்வனே செய்கின்றனர்.
ஒரு சிறுவனது மரணம் ஜுனியர் என்டிஆர் எண்ணத்தையே தலைகீழாக புரட்டிப்போடுகிறது. தங்கள் பகுதி முன்னோர்கள் போல நாட்டைக் காக்கும் தேச பக்தர்களாக வேண்டும் என தீர்மானிக்கிறார். மற்றவர்களையும் கடத்தல் தொழிலுக்கு உதவ வேண்டாம் என தடுக்கிறார். இதனால், ஜுனியர் என்டிஆரைக் கொல்ல தளபதிகள் திட்டமிடுகின்றனர்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.அப்பா, மகன் என இரு வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆர். வருகிறார். அடிதடி, அதகளம், பஞ்ச் டயலாக் என தனது ரசிகர்களுக்கு முழு ட்ரீட் கொடுத்து இருக்கிறார். அவருக்கு இணையாக – தளபதிகளில் ஒருவராக – மிரட்டுகிறார் க சைப் அலிகான்.
மற்ற இரு ஊர் தலைவர்களாக கலையரசன், ஸ்ரீகாந்த் நடித்து உள்ளனர். இருவரும் குறைந்த நேரமே வந்தாலும் பாத்திரம் உணர்ந்து நடித்து ரசிக்க வைக்கிறார்கள்.
கதாநாயகி ஜான்வி. டூயட் பாட மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தின் கதையைச் சொல்பவர், பிரகாஷ் ராஜ். தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
அனிருத் இசை, அதகளம். பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசையும் அபாரம்.ரத்னவேலு ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கடல், மலை என இயற்கையின் பிரம்மாண்டங்களை அப்படியே எடுத்துத் தந்திருக்கிறது.
கலை இயக்குனர் சாபு சிரில், சண்டைப் பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் தங்கள் பணியைச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
பிரம்மாண்டத்தின் மறுபெயர் தேவரா என்று சொல்லும் அளவுக்கு காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர்.
ரசித்துப் பார்க்கலாம்.