“சால்வையை வீசி எறிய காரணம் உண்டு.. ஆனாலும் ஸாரி…!”: நடிகர் சிவகுமார் வீடியோ விளக்கம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ. கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசி முடித்து வருகையில் மேடைக்கு அருகே ஒருவர், சிவகுமாருக்கு சால்வை போர்த்த முயற்சித்தார். அந்த சால்வையை பிடிங்கி ஆவேசமாக தூக்கி எறிந்தார் சிவகுமார்.
இந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவி, வைரலானது. பலரும் சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சால்வை போர்த்த வந்த நபருடன் இணைந்து வீடியோ பேசி சிவகுமார் வெளியிட்டு உள்ளார்.
அதில் இருவரும் மாறி மாறி பேசுகிறார்கள்.
சிவகுமார், “இவர் வேறு யாருமல்ல. என் தம்பி. ஐம்பது ஆண்டுகால நண்பன், கரீம். 1971ம் ஆண்டு, மன்னார்குடியில் ஒரு நாடகத்துக்கு தலைமை தாங்க சென்றேன். அப்போது என்னை வரவேற்று, என்னுடனே இருந்தவர் இந்த கரீம். அன்றிலிருந்து நாங்கள் உடன் பிறவா சகோதரர்களாக பழகி வருகிறோம்.
இவருக்கு திருமணம் செய்து வைத்தது நான்தான். இவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் திருமணத்துக்கும் நேரில் சென்று வாழ்த்தியிருக்கிறேன்.
எனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது. யாராவது எனக்கு சால்வை போர்த்தினால் அவர்களுக்கே திருப்பி போர்த்திவிடுவேன்.
குறிப்பிட்ட கூட்டத்தில் அனைவரும் பேசிய பிறகு நான் பேசி முடிக்க இரவு பத்து மணி ஆகிவிட்டது. மிகவும் டயர்டாக இருந்தது.
அந்த நேரத்தில் இவர் சால்வை எடுத்து போர்த்த வந்தார். அதுவும் எனக்கு இது பிடிக்காது என நன்கு தெரிந்த நண்பர்.
அவர் சால்வை போர்த்த வந்தது தவறு. நான் பொது இடத்தில் அதை விசிறி எறிந்ததும் தவறு” என சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
அவருடன் இருந்த நண்பர் கரீம், “1971ல் அண்ணன் (சிவகுமார்) மன்னார்குடி வந்தபோது அவர் கூடவே இருந்தேன். சாப்பிட,வெங்காயம் தயிர்சோறு போதும் என்றார். இன்னும் அது நினைவில் இருக்கிறது.
அண்ணன்தான் எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார். எங்கள் குடும்ப நிகழ்வுக்கு எல்லாம் எதையும் எதிர்பாராமல் நேராக வந்துவிடுவார்.
அவருக்கு சால்வை போர்த்த வேண்டாம் என என் மனைவி சொன்னார். ஆனாலம் நம் ஊருக்கு வந்திருக்கிறாரே என சால்வை எடுத்து வந்தேன்” என்றார் கரீம்.
ஒருவழியாக, விளக்கம் சொன்னதோடு ஸாரியும் சொல்லி பிரச்சினையை முடித்துவைத்துவிட்டார் சிவகுமார்.