“தேவருடன் மோடியை ஒப்பிடுவதா? இது, இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் ஆரிய பார்ப்பனிய சூழ்ச்சி!”: கருணாஸ் கடும் கண்டனம்

“தேவருடன் மோடியை ஒப்பிடுவதா? இது, இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் ஆரிய பார்ப்பனிய சூழ்ச்சி!”: கருணாஸ் கடும் கண்டனம்

பொன் முத்துராமலிங்க தேவருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான  கருணாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘எவை தமிழ்ச்சமூகத்தின் ஆகச்சிறந்த அடையாளமாக இருக்கின்றதோ அவை அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் சூழ்ச்சிக்கொண்டது இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் ஆரிய பார்ப்பனியம்!!’ என்று காட்டமாக விமர்சித்து உள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “என்னுடைய லிஸ்டில் முதல் கடவுளாக இருப்பது பசும்பொன் தேவர். அவரது  வடிவில் பிரதமர் நரேந்திர மோடி நமக்கு தலைவராக கிடைத்துள்ளார்’ என்று பேசினார்.

இதற்கு டிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான  கருணாஸ், கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில் கருணாஸ் தெரிவித்து இருப்பதாவது:

“தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு!

எவை தமிழ்ச்சமூகத்தின் ஆகச்சிறந்த அடையாளமாக இருக்கின்றதோ அவை அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் சூழ்ச்சிக்கொண்டது இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் ஆரிய பார்ப்பனியம்!!

ஒன்றை திரித்துப் பேசும், அதில் வெல்லமுடியாது போனால் அதை தன்னுடையதாக்கிக் கொள்ளும். அப்படி அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளவே சனாதன அரசியல் தமிழ்நாட்டில் மிகவேகமாக பரவ முற்படுகிறது. தமிழர்கள் விழித்துக் கொள்ளவேண்டும்.

உலகின் மூத்தமொழியாக தமிழை சமற்கிருதத்திலிருந்து வந்ததது என்று பொய்யுரைத்தனர், தமிழர் நாகரிக தமிழர் காளையை குதிரை என்று கொக்கரித்தார்கள். முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். அய்யன் திருவள்ளுவருக்கு காவி உடைபோட்டு பூணூல் மாட்டினார்கள், இராசராசச் சோழனை இந்துமன்னனாக்கினார்கள், சில மாதங்களுக்கு முன்பு வள்ளலாரை சனாதன உச்ச நட்சத்திரம் என்றார்கள். யாரெல்லாம் சனாதனத்திற்கு எதிரானவர்களோ.. அவர்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.வட்டத்திற்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்.

அப்படிதான்.. சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை இந்துத்துவா தலைவராக சித்தரிக்கிறார்கள். வாழும் தேவராக மோடியை பார்க்கிறேன் என்கிறார்.இந்துத்துவாவிற்கு தேவருக்கும் என்ன தொடர்பு? ஆர்.எஸ்.எஸ்க்கு நேர் எதிரானவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேர்தல் நேரத்தில் தேவருக்கு இந்துத்துவா சாயம் பூசும் வேலையை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார். ஏற்கெனவே ஆளுநர் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் வரலாற்று திரிபுகள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் சக்திகள் முத்துராமலிங்கத் தேவரை எப்படியாவது மதவாத வளையத்திற்குள் கொண்டுவருவதும் முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.கவிற்கு மடைமாற்ற நினைப்பதும் திட்டமிட்டு அரசியல் செய்யும் சூழ்ச்சி இதை முக்குலத்து சமுதாய இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வரலாற்றைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் அண்ணாமலை தேவரை பற்றி பேசுகிறார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் வேலையை தெய்வத்திருமகனார் ஒருபோதும் செய்ததில்லை. தேவர் வாழ்ந்த காலத்தில் இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்ம் இருந்ததது. தேவர் மதத்தை முன்னிறுத்துகிறவராய் இருந்திருந்தால் அந்த இயக்கங்களிலே தேவர் இணைந்திருப்பார்! ஆனால் அந்த சனாதன இயக்கங்களின் தேசவிரோத செயல்களை கண்டு அன்றே எதிர்த்து நின்றார் தேவர். அப்படியான தமிழ் முற்போக்கு மூலவரை பிரதமர் மோடியோடு ஒப்பிடுவது வரலாற்று திரிபுவாதம்!

அதுமட்டுமா? தேவர் இந்துத்துவவாதியாக இருந்திருந்தால் இடதுசாரி கொள்கை கொண்ட பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து தமிழ்நாட்டு தலைவராக ஏன் செயல்படவேண்டும்? சிந்தித்துப்பாருங்கள்! 1930களிலிருந்து 1963 தான் சாகும்வரை வரை ஆர்.எஸ்.எஸோ அல்லது இந்து மகாசபையிலோ எந்த தொடர்பும் வைத்துக்கொண்டது கிடையாது. தேவர் ஆன்மீகவாதி என்பதாலயே அவரை இந்துத்துவாவாதியாக மாற்ற நினைப்பது திட்டமிட்ட இந்துத்துவா அரசியல்! தேவரின் தேசியச் சிந்தனை நேதாஜியிடமிருந்து வந்தது தேவரின் ஆன்மிகச் சிந்தனை தமிழர் மெய்யியலிருந்தும் வள்ளலாரிடமிருந்தும் வந்தது. இந்த உண்மையை அண்ணாமலை போன்றோர் தெரிந்து கொள்ளவேண்டும்.

தேவர் எப்போதும் காவியையும் காங்கிரசையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்த்தவர். தேவர் எப்போதும் ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிராக நின்று அரசியல் செய்தவர்.

இடதுசாரி சிந்தனையோடு அரசியல் செய்த தேவரை வலதுசாரி சிந்தனைக்குள் இழுப்பது திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி! பொதுவுடமை தோழர்கள் ஜீவா, பி.இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, கல்யாணசுந்தரம், ஈ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன், சீனிவாசராவ், போன்ற பொதுவுடைமை தோழர்களுடன் தான் அப்போது தேவருடைய உறவு இருந்தது. இறுதிவரை தேவரின் அரசியல் முற்போக்குச் சிந்தனையுடையது.அண்ணாமலை போன்றோர் தேவரின் ஆன்மீகத்தை வைத்து அவரை மதவாதியாக மாற்ற நினைப்பது வரலாற்று புரிதல் இல்லாததின் வெளிப்பாடு! வள்ளலார் எப்படி ஆன்மீகராக நின்று ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்தாரோ அப்படித்தான் தேவரும் ஆன்மீகராக நின்று வள்ளலார் வழியில் ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்தார்.

பசும்பொன் தேவரின் ஆன்மீகம் என்பது தமிழர் மரபு சார்ந்தது. தமிழர் மெய்யியல் சார்ந்தது. திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், வள்ளலார் வழி வந்த தமிழர் ஆன்மீகம் தேவருடையது. தேவர் எப்போதும் தன்னளவில் ஆன்மீகவாதியாக இருந்தார். யாரையும் ஆன்மீக வழியில் அணி சேர்க்கவில்லை. அரசியல் செய்யவும் இல்லை.!

தானே முன்வந்து ஆன்மிக நிகழ்வுகளை தேவர் எங்கேயும், எப்போதும் நடத்தியதில்லை. மதம்சார்ந்த எந்த விழாக்களும் அவர் ஏற்பாடு செய்ததில்லை! ஆனால் பல்வேறு இடங்களில் நடைபெறும் விழாக்களில் தேவரைப் பேச அழைத்ததுண்டு. அங்கு கலந்து கொண்டு தமிழர் ஆன்மீக மரபு பற்றி, தமிழர் மெய்யியல் பற்றி பேசியிருக்காரே தவிர, இந்துத்துவ அரசியலைப் பற்றியோ, மதவெறி சிந்தனையோடோ என்றுமே பேசியதில்லை.

மதத்தைப் பற்றி தேவரின் பார்வை என்ன? 1949 ஜூன் 12 ம் நாள் காலை மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி தேவர் பேசுகிறார், “இந்துக் கோயிலில் காட்டுகின்ற சூட தீப வெளிச்சமும், கிறிஸ்துவர் வணக்கத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தியின் ஒளியும், முகமதியர் ஊதுபத்தியில் காண்கின்ற சுடரும், தன் சரீரத்தின் இருட்டைப் போக்கி, எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் சொரூபம்” “மதங்கள் பலவானாலும் ஆண்டவன் ஒருவனே! விவரமில்லாதவர்கள், கிறிஸ்துவனும், முசல்மானும், இந்துவும் வெவ்வேறு என்றும், ஒவ்வொருவரும் தம் மதத்தின் பெயரால் உலகை ஆளவேண்டும் என்றும் ஆசை கொள்கிறார்கள். சிறியோர்கள், மதவெறி கொள்கிறார்கள். உண்மையான அர்த்தத்தை உணராததால் ஏற்பட்ட வினை இது. பல நதிகள், பல இடங்களில் உற்பத்தியாகி, பல பாதைகளில் சென்று, முடிவில் ஒரே சமுத்திரத்தில் சங்கமமாவதைப் போல, பல மதப்பிரிவுகளும் ஒரே ஆண்டவனை அடையும் மார்க்கமே!” என்று பேசுகிறார். ( ஆதாரம் : மருதுபாண்டியன் சோசலிச மையம்)

இந்துத்துவ கும்பலின் மதவாத வெறிப் பேச்சுக்கும், அவர்களுடைய சித்தாந்தத்திற்கும் தேவருடைய மதம் பற்றிய பார்வைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

பசும்பொன் தேவர் பாட்டாளி வர்க்க கொள்கையை ஏற்றுக் கொண்டவர். முதலாளிய சமூகத்திற்கு மாற்றாக சமத்துவ மாற்றை முன்வைத்தவர். அண்ணாமலை மட்டுமல்ல, அண்ணாமலை போன்ற தேவரை வைத்து அரசியல் செய்ய நினைப்போர் பசும்பொன் தேவரின் ஆன்மீக சிந்தனைகளையும், அவருடைய அரசியலையும் அறிந்து கொள்ள முயலுங்கள்.

பசும்பொன் தேவர் அவர்கள் ஆங்கிலேயே வல்லாதிக்க எதிர்ப்புக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தவர். முதலாளித்துவ பொருளியல் கோட்பாட்டுக்கு மாறாக சமத்துவ சமூக பொருளியல் அமைப்பிற்கான செயல் திட்டங்களின் அடிப்படையில் இயக்கம் நடத்தியவர்.

சாதி ஏற்றத்தாழ்வை எதிர்த்தார். அனைத்து சமூக மக்களுக்காக உழைத்தவர். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தேசத்தின் விடுதலைக்குப் பாடுபட்டவர். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போல் வெள்ளையனிடம் மண்டியிட்டும், எழுதிக் கொடுத்தும், காட்டிக்கொடுத்தும் அரசியல் செய்யவில்லை. இராணுவச் சிறையில் அடைபட்டாலும் தேச விடுதலைக்காய் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். “அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே ” என்ற உயரிய இலட்சிய நோக்குடன் பார்வேடு பிளாக் கட்சியை வழி நடத்தியவர்.

ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு எதிராக எத்துணை இன்னல்கள் வந்தாலும் இடையறாது போராடியவர். ஊழல் பெருச்சாளிகளோடும் மக்கள் சொத்தை சுரண்டிக் கொழுப்பவர்களோடும் எந்த காலத்திலும் அரசியல் உறவு வைக்கக்கூடாது என்று முழங்கியவர்.

மதவாத அரசியலை அடியோடு நிராகரித்தார். அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்ற தெளிந்த சிந்தனையோடு இருந்தார். தமிழ்மொழியை மிகவும் நேசித்தார். தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகத் திகழ்ந்தார்.

தமிழ் வழிக் கல்வி, தமிழ்நாடு பெயர் மாற்றம், எல்லைப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளில் மிகச் சரியான நிலைப்பாடு எடுத்தார். தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விரிவாக எடுத்துரைத்தார். ( ஆதாரம் : நன்றி : மருது பாண்டியன்)

முதலில் தேவரை கைபற்றி பிறகு தேவர் சமுதாயத்தை தன் பக்கம் இழுக்கும் அரசியல் சதி என்பதை முக்குலத்து தேவர் சமுதாய மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். பா.ஜ.கவின் கடந்த கால அரசியல் சூழ்ச்சிகளை தெரிந்து கொள்ளுங்கள். அ.இ.அதி.க.வை இரண்டாக உடைத்ததிலிருந்து சின்னம்மா சசிகலாவை சிறைக்குள் தள்ளியது வரை பா.ஜ.கவின் அரசியல் சூழ்ச்சியை தேவர் சமூக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமா.. தமிழர் உரிமைகள் அனைத்தையும் பறித்ததிலிருந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை, அநீதியான சட்டங்களை புகுத்துவதிலிருந்து அனைத்துமே பா.ஜ.க. தமிழர்களுக்கு எதிராக செய்யும் சதிவேலை! இந்த சதி வலையில் முக்குலத்தோர் சமுதாயத்தை தள்ளி நம்மை அரசியல் அநாதையாக்கும் அநாகரிகச் செயலை இப்போது பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.

தேவர் சமுதாய இளைஞர்கள் தேவரின் வரலாற்றை படிக்கவேண்டும். வரலாற்று திரிபு வாதிகளின் இனிப்பான வார்த்தையில் மயங்கினால் நான் மீண்டும் சொல்கிறேன் நாம் அரசியல் அநாதையாக்கப்படுவோம்!! தேவர் இனமே விழித்துக் கொள்!!
இங்ஙனம்

சேது. கருணாஸ் Ex. M.L.A.,
தலைவர், முக்குலத்தோர் புலிப்படை” – இவ்வாறு கருணாஸ் தெரிவித்து உள்ளார்.