24 வருடம் கழித்து சம்பளத்தைக் கொடுத்த தயாரிப்பாளர்!
படத்தில் பணிபுரிந்த நட்சத்திரங்கள், டெக்னீ2ஷியங்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைப்பது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. கிளியர் ஆகாத செக்குள் பலவற்றை வைத்திருக்கும் நட்சத்திரங்கள் அநேகம் பேர் உண்டு.
ஆனால் இருபத்தி நான்கு வருடங்கள் கழித்து, சம்பள பாக்கியைக் கொடுத்து நெகிழ வைத்து இருக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
அன்புச் சகோதரர் பிரபல ஒளிப்படக்கலைஞர் ஸ்ரீராம் செல்வராஜ் நேற்று அலைபேசினார். அவர் சொன்ன விசயம் நெகிழ வைத்தது.
அவர் சொன்னது இதுதான்:
” ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ரியாஸ் அகமது ( Riaz K Ahmed) எனது எனது நீண்ட கால நண்பர்.
பல வருடங்களுக்கு முன், அவர் பத்திரிகைகளுக்கும் எழுதி வந்தார். அப்போது சினிமா செய்திகளை சேகரிக்க அவரும், புகைப்படங்கள் எடுக்க நானும் ஒரே சைக்கிளில் டபுள்ஸ் போவோம். மாமல்லபுரம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கும்போது டி.வி.எஸ்.50ல் சென்று செய்தி சேகரிப்போம்.
படிப்படியாக பிரபலங்கள் பலருக்கு பி.ஆர்.ஓ.ஆக உயர்ந்தார் ரியாஸ். அதோடு திரைப்படங்களுக்கு பி.ஆர்.ஓ.ஆக பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்த நிலையில், 2003ம் ஆண்டு ‘தத்தி தாவது மனசு’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். கலாபவன் மணி, வடிவேலு, மும்தாஜ், சோனா உள்ளிட்டோர் நடித்தனர்.
பாண்டியராஜன், விக்ரமன் ஆகியோரிடம் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றிய அழகு ராஜசுந்தரம் இப்படத்தை இயக்கினார்.
பட்டப்பகளில் ஒரு வழக்கறிஞர் கொல்லப்பட்டது, 40 நபர்கள் இறப்புக்குக் காரணமான ஒரு விபத்து ஆகிய பரபரப்பான இரண்டு நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.

தேவா இசை அமைக்க, வாலி, பழனி பாரதி உள்ளிடடோர் பாடல்களை எழுதினர்.
அந்தப் படத்துக்கு ஸ்டில் போட்டோகிராபராக நான் பணி புரிந்தேன். பட பூஜையின் போது அட்வான்ஸ் கொடுத்தார். தொடர்ந்து பணியாற்றினேன்.
இடையில் அவருக்கு பணப்பிரச்சினை. கடன் வாங்கி படத்தை எடுத்து முடித்தார். அடிக்கடி என்னிடம், “உங்களுக்கு பணம் பாக்கி இருக்கே… ஏதும் தரட்டுமா” என்று கேட்பார்.
நண்பரின் சிரமம் தெரியும்போது, பணம் கேட்க முடியுமா…?
“பிறகு வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிடுவேன்.
சந்தர்ப்ப சூழலால் படத்தை அவரே வெளியிட்டார். அப்போதும் கடன். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பெரும் கடனில் சிக்கினார். நானும் நண்பர் ரியாஸின் நிலை அறிந்து, எனது பணிக்கான பணத்தைக் கேட்கவில்லை.
பிறகு ஆளுக்கொரு திசையில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
இந்த நிலையில் நேற்று திடீரென அலைபேசினார் ரியாஸ். வீட்டுக்கு வர இருப்பதாக கூறினார். முகவரி அனுப்பினேன்.
வந்தார். அதே பழைய பாசத்தில் மலரும் நினைவுகளை அசைபோட்டோம்.
கிளம்பும்போது, தனது பையில் இருந்து எடுத்து கணிசமான தொகையைக் கொடுத்தார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“தத்தித்தாவுது மனசு படத்தில நீங்க ஒர்க் பண்ணதுக்கு அப்போ பணம் கொடுக்க முடியல.. அந்த படத்தால ஏற்பட்ட கடன்கள் இன்னமும் தொடருது. ஆனாலும் இடையில கொஞ்சம் பணம் வந்தது. உங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்” என்றார் ரியாஸ்.
அதிர்ச்சியடைந்தேன்..
இருபத்தினான்கு வருடங்களுக்கு முன் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் பணியாற்றியதற்கான தொகையை நான் மறந்தே விட்டேன். ஏனென்றால் நண்பர் ரியாஸின் நிலை அறிவேன். லட்சங்களில் வாங்கிய கடன், கோடிகளாகி அவர் தவிப்பதை அறிவேன்.
ஆனால் அதை மனதிலேயே வைத்திருந்து, இத்தனை வருடங்கள் வந்து கொடுக்கிறார்.
நான் என்ன சொல்ல..
கண்கலங்கி நின்றேன்..!” என்று நெகிழ்ந்து சொன்னார் ஸ்ரீராம் செல்வராஜ்!” இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார், டி.வி.சோமு.
