ஆண்களை அச்சுறுத்தும் தீர்ப்பு!: தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கவலை!

ஆண்களை அச்சுறுத்தும் தீர்ப்பு!: தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கவலை!

வெளிநாட்டில் வேலை பார்த்து, அனுப்பிய பணத்தைல் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியதோடு, அதை விற்கும் உரிமையை (பவர்) தனது நண்பருக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறார். இதை எதிர்த்து கணவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

விசாரணைக்குப் பின் தீர்ப்பில், “குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலையாகும். அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது.

கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது. குடும்பத்தை மனைவி கவனிப்பதால்தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது.கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால், மனைவிக்கும், தனது கணவனின் சொத்தில் உரிமை உள்ளது.

குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை” என்று தீர்ப்பளித்தது.

இது குறித்த தமிழ்நாடு ஆண்கள் உரிமை சங்க தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

“இந்த வழக்கின் தீர்ப்பு கவலை அளிக்கிறது. குடும்பத்தின் நலனுக்காக, மனைவி மற்றும் குழந்தைகளுக்காக, கணவன் வெளிநாடு சென்று சம்பாதித்து இருக்கிறார். ‘கணவன் எட்டு மணி நேரம் வேலை பார்க்கிறார்’ என்கிறது நீதிமன்றம். பொதுவாகவே வெளிநாட்டு வேலை என்பது, முடிந்த வரை அதிக நேரம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே ஏற்படுத்தும். ஆகவே நேரம் காலம் இன்றி எட்டு மணி நேரத்துக்கு மேல் உழைப்பார்கள். இதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.மேலும், தனது ரத்தத்தை வியர்வையாக சிந்தி, குடும்பத்துக்காக உழைத்து கணவன் பணம் அனுப்பி இருக்கிறார். அந்த பணத்தில் தனது பெயரில் சொத்துக்களை வாங்கி இருக்கிறார் மனைவி. தவிர, சொத்துக்களை விற்கும் உரிமையை – பவர் பத்திரத்தை- தனது ஆண் நண்பருக்கு அளித்திருக்கிறார். அந்த ஆண் நண்பர் அவரது கள்ளக்காதலன் என கணவர் தெரிவித்து உள்ளார்.

இன்னொரு விசயம்… ‘வரதட்சணை பணத்தைக் கொண்டுதான் கணவர் வெளிநாட்டுக்குச் சென்றார்’ என்கிறார் மனைவி. அதை நீதிமன்றமும் சுட்டிக்காட்டுகிறது.வரதட்சணை என்பது சட்டப்படி தவறு. வாங்குது மட்டுமல்ல.. கொடுப்பதும் குற்றம். ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பைப் பார்த்தால், வரதட்சணையை நீதிமன்றம் ஆதரிக்கிறதோ என்கிற எண்ணம் பொது மக்களுக்கு வருகிறது.

தொடர்ந்து இப்படிப்பட்ட தீர்ப்புகள் வந்தால், ‘கடுமையா உழைத்துச் சம்பாதித்து, மனைவி- குழந்தைகளுக்கு சம்பாதித்து வைக்க வேண்டும்; அதன் பிறகு மறைந்தாலும் பரவாயில்லை’ என்று தியாக உணர்வுடன் நினைக்கும் ஆண்களை, விரக்தி அடைய வைக்கும். ‘எதற்காக சொத்து சேர்க்க வேண்டும்’ என்ற ஆதங்கத்தை எழுப்பும். ஆகவே அவர்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்துக்கு அளிக்காமல், ஊதாரித்தினமாக செலவு செய்யும் மனநிலைக்குச் செல்வார்கள்.அப்படியே உழைத்து சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி, அவள் தனது பெயரில் சொத்துக்களை வாங்கி,  தனக்கு நெருக்கமான நபருக்கு பவர் பத்திரம் எழுதி வைத்தால்…. கணவன் ஊர் திரும்பியவுடன், நடுத்தெருவில் நிற்பான்; மனைவியோ இன்னொரு ஆணுடன் வாழ்வாள்.
குடும்பம் பிரிய காரணமாகும். குழந்தைகள் தவிக்கும்.

தவிர, இதுபோன்ற சம்பவங்கள் வன்முறைக்கும் வழிவகுக்கும். தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு கணவன் மீது பொய் வழக்கு தொடுப்பது, தாக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.  தவிர,  திருமண உறவை மீறிய பெண்களின் தொடர்புகளால் ஏற்படும் விவகாரங்கள், கொலைகள் நாளும் அதிரித்து வருவதை புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதையெல்லாம் நீதிமன்றம் புரிந்துகொளளவில்லை.

‘குறிப்பிட்ட இந்த தீர்ப்பு எந்திரத்தனமான முட்டாள்த்தனமானது’ என மக்கள் விமர்சிக்க ஏதுவாகிவிடும்.

ஆகவே இத்தீர்ப்பை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

 

வழக்கறிஞர் அருள் துமிலன்,

தலைவர்,  தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்,

9840870807 

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

Related Posts