“தடை சரிதான்!” : ‘பப்ஜி’ இயக்குனர் பரபரப்பு கருத்து
இளைஞர்களை சீரழிக்கும் ஆபத்தான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பல காலமாக இருந்துவந்த நிலையில், இவ்விளையாட்டை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இணையம் மூலம் செல்போனில் விளையாடப்படும், போர் விளையாட்டு இது. ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு விளையாடுவர்.
முழுக்க முழுக்கத் துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக நினைத்து, எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ போராடும் வன்முறைகள் நிறைந்த இந்த விளையாட்டில், நிஜமான துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்றவற்றின் மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலகம் முழுதும் சுமார் 30 கோடி இளைஞர்கள், இந்த விளையாட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் சுமார் 5 கோடி பேர் விளையாடிவருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் படிப்பு, குடும்பம், வேறு விளையாட்டுகளை புறக்கணித்து இரவு பகலாக இந்த விளையாட்டில் ஈடுபட்டு அடிமையாகிக் கிடக்கிறார்கள். இவர்களில் பலர், இந்த விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியை ஏற்கமுடியாமல் மனநலம் பாதித்ததும், தற்கொலை செய்துகொண்டதும் நடந்து வருகிறது.
இந்நிலையில்தான், மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது.
இந்த, ‘பப்ஜி’ விளையாட்டை மையமாக வைத்து, விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ ( சுருக்கமாக, ‘பப்ஜி’) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பப்ஜி விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் படம் இது.
‘பப்ஜி’ விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், இது குறித்து படத்தை உருவாக்கி வரும் இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜியிடம் பேசினோம்.
அவர், “தடை வரவேற்கத்தக்கது. வளரும் சமுதாயம் பாதிக்கப்படுது. பப்ஜியால் ஏற்படும் ஆபத்துக்களைதான் எனது படத்தில் சொல்லியிருக்கிறேன். ‘டோன்ட் ப்ளே பப்ஜி’ என்பதையே படத்தின் கேப்ஷ்னாக வைத்திருக்கிறேன். இது போன்ற விளையாட்டுகளே மக்களை அடிமைப்படுத்துவதுதான். பெரிய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள்கூட இந்த விளையாட்டை விளையாடுவதை பெருமாயாக சொன்னதும் நடந்தது. பப்ஜி விளையாட்டை தடை செய்ததற்காக பல இளைஞர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆனால் எனது திரைப்படத்தைப் பார்த்தால் தடை எவ்வளவு சரியான நடவடிக்கை என்பதை உணர்வார்கள்…!” என்றார்.
மேலும், ” விரைவில் திரையரங்கில் பப்ஜி வெளியாகும்!” என்றார் உற்சாகமாக..!
– யாழினி சோமு