சூர்யாவுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு..!
தான் தயாரித்த, ‘பொன்மகள் வந்தாள்’, ‘சூரரைப் போற்று’ ஆகிய இரு திரைப்படங்களையும் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளிட்ட நடிகர் சூர்யாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; இனி சூரியாவின் படங்களை திரையிடுவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூர்யாவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தரும் மறைமுகமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இவரது தலைமயில் இயங்கும், சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கம். சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் கூட்டம், நேற்று ( 2.9.2020) ஸூம் செயலி மூலமாக நடைபெற்றது. அப்போது, “ஒரு பெரிய நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியை தோளிலே தூக்கி சுமந்தவர்கள் விநியோகஸ்தர்கள் தான். ஆனால் இன்று ஓ.டி.டி. தளம் வந்திருக்கிறது என்பதற்காக சிலர் நேரடியாக அத்தளத்தில் படங்களை வெளியிடுகின்றனர்.
கொரோனாவால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கலாம். ஆனால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது எங்களை நாடித்தான் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரவேண்டி இருக்கும்.
வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், படத்தின் விநியோக உரிமையை விநியோகஸ்தர்களிடம் விற்றுவிட்டு, படத்தை ஓ.டி.டியில் வெளியிட்டால், விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும், ‘திரையரங்க நுழைவு கட்டணங்களுடன் வசூலிக்கப்படும் 8 சதவீகிதம் உள்ளாட்சி வரியினை ரத்து செய்யவேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தான் தயாரித்த படங்களை நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்ட சூர்யாவை, டி.ராஜேந்தர் தலைமையிலான விநியோகஸ்தர் சங்கம் மறைமுகமாக கண்டித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– யாழினி சோமு