போலீஸ் கையை கடித்த த.வெ.க. வீரர்!: விஜய் மீது வழக்கு?
டி.வி.சோமு பக்கம்:
நடிகர் விஜய், நடனக்காட்சிகளில் மட்டுமல்ல.. சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துவார். ஆனால், தன்னை எதிர்த்து நிற்கும் ஸ்டண்ட் நடிகர்களை அவர் கடித்தே இல்லை.
ஆனால், தருமபுரி மாவட்டத்தில், பள்ளிக்கு அருகில் புதிதாக மதுபான கூடம் திறக்கப்பட, அதை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய த.வெ.க.வினரில் ஒருவர், காவலரின் கையைக் கடித்துவிட்டார்.
ஒரு விதத்தில் இதைக் குறை சொல்ல முடியாது
“தன்” பற்“குறி”யை, பிறர் மீது பதித்த காரணத்தால், தற்குறி என்பது சரிதான் என நிரூபித்து இருக்கிறார் அந்த போராட்ட வீரர்.
சிலருக்கு ஆச்சரியம்…
“தங்கள் தலைவர், லியோ படத்தில் ‘நா ரெடி’ பாடலில், “பத்தாது பாட்டில் நா குடிக்க..
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” என்று உற்சாகமாக பாடியதையும், பீஸ்ட் படத்தில், “பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா.. ஷாம்ப்பெய்ன் தொறக்கட்டுமா…” என்று ஆடியதையும் மறந்துவிட்டு, மதுக்கடையை எதிர்த்து போராடுகிறார்களே தவெ.க. புள்ளிகள்!” என அதிசயிக்கிறார்கள்.
இன்னும் பல படங்களில் போதை ஆட்டம் போட்டவர்தான் விஜய். ஆனாலும், மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம் என்றால் வரவேற்கத்தான் வேண்டும்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அருள் என்ற காவலரின் கையை, நறுக் என கடித்துவிட்டார் த.வெ.க. தொண்டர் ஜெமினி.
இதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள்…
போராட்டம் நடந்தது தர்மபுரி மாவட்டத்தில், கடிபட்டவர் அருள், கடித்தவர் ஜெமினி.. எல்லாமே சினிமா டைட்டில்கள்! (“கடி” என்ற பெயரில் படம் எடுக்கலாம்.. தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒருவேளை வந்துவிட்டதா என தெரியவில்லை!)
கொஞ்சம் சீரியஸாக போவோம்..
யார், யார் கடிப்பார்கள்?
குழந்தைகளுக்கு கடிக்கும் பழக்கம் இருக்கும். பல் முளைக்கும் போது, துருதுருவென இருப்பதால், பார்க்கும் பொருட்களை எல்லாம் வாயில் வைத்து கடிக்கும். சக குழந்தைகளையும் கடிப்பது உண்டு.
முரட்டு ஆண்களிடம் சிக்கிக்கொள்ளும்பொது தங்களை காப்பாற்றிக்கொள்ள அப்பாவிப் பெண்கள் கடித்து, தங்களைக் காப்பாற்றிக் கொண்ட சம்பவங்களையும் கேள்விப் பட்டு இருக்கிறோம்.
நாய்க்கடி பட்டு, ரேபிஸ் நோய்க்கு ஆளானவர்கள் பிறரை கடிப்பது உண்டு.
ஏன்.. பெங்களூருவில் ஒருவர் போதையில் பாம்பை கடித்து, விசம் ஏறி பலியானார்.
தலைகீழான சம்பவம் பீகாரில் நடந்தது. தன்னை கடித்த பாம்பை ஆத்திரத்தில் ஒருவர் பதிலுக்கு கடிக்க.. பாம்பு செத்தது.. மனிதர் பிழைத்துவிட்டார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது வேறு விதம். குடும்ப விழாவில் ஏதோ பிரச்சினை.. சண்டை.. ஒருவரின் காதைக் கடித்து மென்று விழுங்கிவிட்டார் இன்னொருவர்!
காது போயே போச்!
இப்போது தர்மபுரியில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி குறித்து பார்ப்போம். இவர் குழந்தை இல்லை.. போதையில் இல்லை, நான்கைந்து பேர் சூழ தனியே சிக்கித் தவிக்கவும் இல்லை.. போராட்டத்தில்தான் கலந்துகொள்கிறார்.
பிறகு ஏன் கடித்தார்..?
மனநல நிபுணர்கள், “மன அழுத்தம், மனப் பிரச்சினை இருப்பவர்கள், பலர் சூழ இருந்தாலும் தனிமையில் இருப்பதாக உணர்வது உண்டு.. அப்போது அச்சத்தில் உணர்ச்சிவசப்பட்டு கடிக்க வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள்.
கடிபட்டவருக்கு என்ன மாதிரி பாதிப்பு ஏற்படும்?
“மனிதக் கடியும், நாய்க்கடி போல ஆபத்தானதுதான். மேலோட்டமாக கடித்து இருந்தால் கொஞ்சம்தான் பாதிப்பு. ஆழமாக கடித்து காயம் ஏற்பட்டால் அது ஆபத்துதான். மனிதனின் வாயில் உள்ள உமிழ் நீர் பாக்டீரியாக்கள் காயத்தின் மூலம் பரவி கடுமையான நோய்த்தொற்று ஏற்படும்… வாஸ்குலார் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்கிறார்கள்.
ஆஸ்டியோமைலிடிஸ், செப்டிக் ஆர்த்ரிடிஸ், டெனோசினோவிடிஸ் போன்ற பாதிப்பும் ஏற்படலாம்” என புரியாத நோய்களை எல்லாம் பட்டியலிடுகிறார்கள்.
ஆனால் தர்மபுரியில் ஜெமினியால் கடிபட்ட காவலர் அருளுக்கு அப்படி ஏதும் பிரச்சினைகள் இல்லை என தகவல்கள் வருகின்றன. அது வரையில் நிம்மதி. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.
சரி, கடித்தவருக்கு என்ன தண்டனை?
சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசியபோது, “இந்திய தண்டனை சட்டத்தில், “கடித்தல்” என்பதற்கான சட்டப்பிரிவு இதுவரை இல்லை. மனிதர்கள் அப்படி யாரையும் கடிக்க மாட்டார்கள் என சட்டம் வகுத்தவர்கள் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
அதே நேரம், இந்திய தண்டனை சட்டம் 323,325 ஆகியவற்றின்படி காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் ஆகிய குற்றங்களின் அடிப்படியில் வழக்கு பதியப்படும். கூடுதலாக, காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றமும் சேரும்.
இவற்றுக்கு குறைந்தது மூன்று மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம்” என்றார்கள்.
எனக்கு இன்னொரு விசயம் நினைவுக்கு வந்தது.
விலங்குகள் மனிதரை கடித்தால்.. அந்த விலங்கின் உரிமையாளர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 289ன்படி வழக்கு பதியலாம். ஆறு மாதம் வரை சிறை தண்டனை.
ஆனால் தர்மபுரி வழக்கில், த.வெ.க. உரிமையாளர் விஜய்க்கு அப்படி தண்டனை கிடைக்க வாய்ப்பு இல்லை.
– டி.வி.சோமு
