“டி.ஆர். எதுகை மோனை, பிரச்சினையை தீர்க்க உதவாது!” :  ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி ஆகியவை போட்டியிடுகின்றன. இவை தவிர மேலும் சில அணிகள் மற்றும் சுயேச்சைகள் இதர பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், டி.ராஜேந்தர், “வி.பி.எப். கட்டணத்துக்கு எதிராக தயாரிப்பாளர்கள் தரப்புக்காக, நான்தான் முதல் குரல் கொடுத்தேன். தமிழ் திரையுலக  நன்மைக்காக பிரதமர் மோடி கார் முன்னே குதிக்கவும் தயார்!” என்றார்.

இது  குறித்து,  தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:

“டி.ராஜேந்தர் வழக்கமான சினிமா வசனம் போல எதுகை மோனையுடன் பேசுகிறாரே தவிர, பிரச்சினைகளை பேசுவதில்லை. முதலில் அவர் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். விநியோகஸ்தர் சங்க தலைவராக இருக்கும் அவர், எப்படி தயாரிப்பாளர் சங்க பதவிக்குப் போட்டியிடலாம்? இரு தரப்புக்கும்தான் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பஞ்சாயத்துகள் நடக்கும். அப்படி நடந்தால், அவர் எவர் பக்கம் இருப்பார்?

தவிர, திரையரங்க டிக்கட் கட்டணத்தை பற்றி பேசுகிறபோது அவர்
விநியோகஸ்தர்களுக்காக பேசுகிறாரா,  தயாரிப்பாளர்களுக்காக பேசுகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

வி.பி.எப். பற்றிய தெளிவான முடிவினை எந்த சங்கமும் கூறவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதால் இப்படி ஒரு கேள்வி வருகிறது தியேட்டர் உரிமையாளர்களும், டிஜிட்டல் நிறுவனங்களும் கூட்டு கொள்ளை நடத்திவந்தது அம்பலத்திற்கு வந்துவிட்டது.  தேர்தல் முடிந்தபின்  வி.பி.எப். கட்டணத்தை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிப்போம்!

அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்!

தவிர சங்கத்தின் நிதி நிலையை பெருக்கவும் திட்டங்கள் வைத்துள்ளோம்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 200 கோடி ரூபாய் டிஜிட்டல் புரவைடர்களுக்கு கட்டணமாக தயாரிப்பாளர்கள் மூலம் வருமானமாக கிடைக்கிறது இதனை முழுமையாக ரத்து செய்கிறபோது தயாரிப்பாளர்களிடம் குறைந்தபட்சம் 5% சங்க அறக்கட்டளைக்கு சேவை கட்டணமாக பெற்றாலே 10 கோடி ரூபாய் கிடைக்கும் பிற வணிக ரீதியான வருவாய்மூலம் 20 கோடி ரூபாய் கிடைக்கும். நாங்கள் வென்றவுடன் உடனடியாக இத்திட்டத்தை அமலாக்குவோம்!” என்றார் ராதாகிருஷ்ணன்.

 

 

 

Related Posts