சூர்யாவின் அகரம்: பிரபல இயக்குநர் சீனுவின் நேரடி அனுபவம்
நடிகர் சூர்யா நடத்தும், ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூர்யா, ‘நீட் தேர்வு தேவையில்லாதது’ என விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து சிலர், ‘சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவி பெறுவோரிடம் சாதி கேட்கப்படுகிறது’ என அவதூறாக சமூகவலைதளங்களில எழுதினர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி, அகரம் அறக்கட்டளையுடனான தனது அனுபவம் ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது..
“எங்கள் குடும்ப நண்பர் பள்ளிஆசிரியர் திருமதி செல்வி ராஜமோகன் தனது மாணவிக்காக என்னிடம் தொலைபேசியில் அகரம் பவுண்டேஷனில் உங்களுக்கு யாராவது தெரியுமா? எனக்கேட்டார்.
பள்ளியில் சிறுவயதில் நாடகங்கள் நடிப்பதற்கும் ஊக்கப்படுத்தி நடிப்பும் சொல்லித் தந்து கலை ஆர்வத்தை தூண்டியவரும்
நடிகர் திரு,ராஜேஷ் அவர்களின் நண்பரும் எனது பள்ளி ஆசிரியருமான மாணிக்கம் வாத்தியார் அவர்களின் மகள்தான் அரசுப்பள்ளி ஆசிரியை திருமதி செல்வி ராஜமோகன்.
அவரது தம்பி.M.செந்தில் ராஜ்கண்ணா ஜாக்ஷன் துரையாகவும்
நான் கட்டப்பொம்மன் வேடத்திலும் அந்நாளில் பள்ளி நாடகத்தில் பங்குபெற்றோம்.
.
என்னால் மறுக்க முடியாது
ஆகவே விசாரிப்பதாக கூறி
#2DRajashekar சூர்யா அவர்களின் திரைப்படக் கம்பெனி நிர்வாகியை தொடர்புகொண்டேன்.
அவரை தொடர்பு கொண்ட போதுதான் எனக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தது.
அகரம்
நிறுவனத்தின்
கல்வி உதவிகளில்
ஜாதி இல்லை.
மதமில்லை
அவர் உண்மையில்
உதவி தேவைப்படுபவரா?
என்பதற்கான ஆய்வுகள் உண்டு.
பள்ளிகல்லுரிக்கு நேரடியாகவே
பணம் செலுத்தப்படும்.
திருநங்கை/திருநம்பிக்கு
இடமுண்டு 🙏
இப்படியான விதிமுறைகள் அறிந்த போது நெகிழ்ந்தேன்.
கண்ணுக்கு குலமேது
கருணைக்கு நிறமேது
கண்ணதாசனின் கர்ணன் பாட்டு நினைவில் வந்தது
நான் உதவி இயக்குநராக இருந்த சமயம் இதே போல கல்விக்கு உதவுபவரை ஒரு சூழலில் நேரிடையாக சந்தித்தேன் “.நீங்க யார்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டர் எனக்கேட்டுக்கொண்டே”என்னுடன் வந்த மாணவருக்கு
உதவியவர்
அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.🙏
சிறுவயதில் நான் பலமுறை பல வகுப்புகள் பள்ளிக் கட்டணம் கட்டாததால் இடையிலேயே வீட்டுக்கு போய் பணம் வாங்கி வர அனுப்பி வைக்கபட்டிருக்கிறேன்.
தலையில் மாட்டிய தபால் பையுடன் தலைகுனிந்து வேப்பமர நிழல் விழுந்த சாலை வழி பதினோரு மணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவேன்.
பணம் கட்டும்வரை பள்ளிக்கு போகமாட்டேன்
அந்த கணம் அது அவமானந்தான்
இதை என் போலே உணர்ந்தால் புரியும்..
Love to call you!” – இவ்வாறு சீனுராமசாமி குறிப்பிட்டு உள்ளார்.
-யாழினி சோமு