சூர்யாவின் அகரம் தெரியும்.. அதற்கு மூல காரணம் யார் தெரியுமா?

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணித்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்”

– நடிகர் சிவகுமார் நடித்த ‘ரோஜாப்பூ ரவிக்கைக்காரி’ பட வெளியீட்டு விழாவில் பேசியபோது, இப்படிச் சொன்னவர் தமிழக முதல்வரான ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்.

அதே விழாவில் இன்னொன்றையும் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“சிவகுமாரை நல்ல மனிதர் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. எல்லோரும் மனிதர்கள் தான். ஆனால் நல்லதைச் செய்து, மக்கள் அதைப் புரிந்து கொள்ளுமாறு, அது தெளிவாக விளக்கப்படும்போது தான் அந்த மனிதரை ‘நல்ல மனிதர்’ என்று நாம் குறிப்பிடுகின்றோம்.

தான் சம்பாதித்த பொருளை வேண்டாத விஷயத்துக்குச் செலவழித்து விரயமாக்காமல், அதைச் சேர்த்து வைப்பதில் ஓரளவுக்கு அக்கறை காட்டி, உதவி செய்வதிலும் நல்ல தன்மையைக் காட்டி இங்கே 25,000 ரூபாயைப் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதன் வட்டியிலிருந்து உதவி செய்ய, உருவாக்கித் தந்திருக்கின்ற அந்த நல்ல உள்ளத்தை அவர் பெற்றிருக்கும்போது, நல்ல மனிதர் என்று சொல்லாமலே அந்த அடைமொழி அவருக்குச் சொந்தமாகி விடுகிறது.”

எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26 ஆம் தேதி) அன்று – வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

“25,000 ரூபாயில் ஒரு டிரஸ்ட் அமைத்து பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் திட்டத்தை எனது தாயார் முன்னிலையில் திரு.எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.

சிறுவயதில் திரைப்படங்களும், நாடகமும் பார்க்க வாய்ப்பின்றி வளர்ந்த நான், 14 வருடங்களில் 100 படங்களில் நடித்துள்ளேன்.

பள்ளிக்கூட வசதி, குடி தண்ணீர் வசதி எதுவுமே இல்லாத சிறு கிராமத்தில் பிறந்து எஸ்.எஸ்.எல்.சி படித்துத் தேறிய முதல் மாணவன் நான். ஏதோ ஒரு வெறியில் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓவியக்கலை பயின்று முதல் மாணவனாகத் தேறினேன்.

கத்துக்குட்டியாக நடிப்புலகில் நுழைந்த எனக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர்கள் திரு.எம்.ஜி.ஆரும், திரு.சிவாஜியும்.

அவர்களின் வாழ்க்கைப் பாதையும், கலையுலகச் சாதனைகளுமே எனக்குப் பாடப் புத்தகங்கள்” என்று விழாவில் நன்றி தெரிவித்துப் பேசினேன்.”

கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிற நடிகர் சிவகுமார் தன்னுடைய பெயரில் அறக்கட்டளையைத் துவக்கியது 1979 ஆம் ஆண்டில்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுவரை அந்த அறக்கட்டளையால் நிதியுதவி கிடைக்கப் பெற்றவர்களில் பலர் கிராமப்புறம் சார்ந்தவர்கள்.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். ஆரம்பத்தில் கொடுத்த தொகையைத் தற்போது விரிவுபடுத்தியிருக்கிறார் சிவகுமார்.

முதலில் +2 தேர்வில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தவர், தற்போது ஐயாயிரம் ருபாய் வரை முதலில் வந்து பத்து மாணவ, மாணவியிருக்குப் பகிர்ந்து அளிக்கிறார்.