சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு பெற்ற சுரேஷ் காமாட்சி + ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’
சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் ராம் இயக்க, நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. இத்திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படம், சமீபத்தில் நடந்து முடிந்த “ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்க்ரீன்’ போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டது; ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களில் பார்வைக்காக திரையிடப்பட்டது.
கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இத்திரைப்படம் ஒரு தலை சிறந்த படைப்பு எனவும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளதாகவும் பலரும் பாராட்டினர்.
இது குறித்து தெரிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இத் திரைப்படம் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதோடு தொடர்ந்து ரசிகர்களின் கவனைத்தைத் தன்பக்கம் ஈர்த்தபடி இருக்கிறது. இந்நேரத்தில், தரமான கதைகளைச் சொல்லும் திரைப்படங்களைத் தயாரித்து உலக அரங்கில் தமிழ்சினிமாவின் தனித்துவத்தை உணர்த்தும் அனுபவங்களைத் தொடர்ந்து வழங்குவதற்கும் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் உறுதியுடன் செயல்படத் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்!” என்றார்.
