முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கலைஞர்  நூற்றாண்டு விழா! சிறப்பு ஏற்பாடுகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கலைஞர்  நூற்றாண்டு விழா! சிறப்பு ஏற்பாடுகள்!

திமுக சார்பில் கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழா மகளிர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அக்டோபர் 14ஆம் தேதி சென்னை வருகிறார் சோனியா காந்தி. இதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பிருந்தா காரத், உள்ளிட்ட இன்னும் பல பெண் ஆளுமைகள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், இதற்கான ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி. கவனித்து வருகிறார். சோனியா காந்தி நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வருகிறார் என்பதால் அவரது இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாக வெளியூர் பயணங்களை முற்றிலும் தவிர்த்து வரும் சோனியா காந்தி, கருணாநிதி நூற்றாண்டு விழா என்பதாலேயே தவிர்க்காமல் அதில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளார்.

2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய கருணாநிதி முன்னெடுத்த முயற்சிகளை, அவரது நூற்றாண்டு விழாவில் சோனியாகாந்தி நினைவு கூர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக ஆட்சிக்காலங்களில் பெண்களுக்கு என்னவெல்லாம் செய்யப்பட்டது என்பது பற்றியும் இந்த மகளிர் மாநாட்டில் பேசப்படவுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவை வெற்றியடையச் செய்வதற்கான ஆலோசனைகளில் கனிமொழி ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்தாலும் கூட இது தொடர்பான பணிகளை கவனிக்கத் தவறுவதில்லை. இதனிடையே சோனியாகாந்தியை தடபுடலாக வரவேற்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் நாட்கள் நடைபெறவுள்ளது.

Related Posts