‘பாஜகவில் இணையலாமே!”: செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை ‘ஆலோசனை!’

‘பாஜகவில் இணையலாமே!”:  செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை ‘ஆலோசனை!’

சென்னை: “நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது என்று ஜாமீன் கோரிய வழக்கில், அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.அல்லி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முந்தையது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளாக செந்தில் பாலாஜி வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித் துறையால் ஏற்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை

வேலைக்காக பணம் கொடுத்தாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் என்ற இருவரிடம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீது கோபி, பிரபு ஆகிய இருவர் புகாரளித்தனர். அதில் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்படவில்லை. மற்றொருவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கூடவில்லை” என்றார்.

மேலும், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?’ என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது”என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “செந்தில் பாலாஜி மீது கூறப்படும் முறைகேடு அவர் அதிமுகவில் இருந்தபோது நடைபெற்றது. ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 6 நாட்கள் சட்ட விரோதமாக அமலாக்கத் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் ” என்று  தெரிவித்தார்.

அப்போது, ‘இந்த வழக்கில் புதிய ஆவணங்களை தற்போது தாக்கல் செய்துள்ளதால் எங்களது தரப்பு வாதத்தை செவ்வாக்கிழமை தொடங்கலாமா?’ என்று அமலாக்கத்துறை தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வருமான வரி கணக்கை, வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்று பல தீர்ப்புகள் உள்ளன.. விசாரணையில் தான் உண்மை தெரியவரும்.

அமலாக்கத் துறை விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது.

அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலை ஒரு காரணம் அல்ல” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

Related Posts