பிரம்மாண்டமாக நடந்த ஷங்கர் மகள் திருமணம்! வாழ்த்திய பிரபலங்கள்!
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த, இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தில் ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களின் புகைப்படம் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமாவின் மீது இருந்த ஆசையால் விருமன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், மதுர வீரன் அழகுல என பாட்டுப்பாடி தனக்கு பாடவும் தெரியும் என்பதை நிரூபித்தார். தற்போது இவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் மருமகனாக்கி உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்ற நிலையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாடாளுமன்றத் தேர்தல் 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் பிஸியாக இருக்கும் இவர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.