“என்னை எட்டி உதைக்கச் சொன்ன கொடூர இயக்குநர்!”: மனம் திறந்த மாணிக்கம் சமுத்திரக்கனி

“என்னை எட்டி உதைக்கச் சொன்ன கொடூர இயக்குநர்!”: மனம் திறந்த மாணிக்கம் சமுத்திரக்கனி

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’.

இத்திரைப்படம் டிசம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இதையொட்டி  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அமீர், லிங்குசாமி, விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசினார் சமுத்திரக்கனி.

அவர்,  “முதன் முதலாக, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கு நடிக்க போயிருந்தேன்… சிறிய கேரக்டர்தான்.  அப்போது மிகவும் ஒல்லியா இருந்தேன். என்ன பார்த்து இயக்குநர் என்ன நினைத்தாரோ…  பக்கத்துல இருந்த ஒருத்தரை அழைத்து,  ‘அவன உதைக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு, நீ அவன உதைக்கிற உதையில அவன் போய் வெளிய விழணும். அப்புறம் அவனுக்கு சினிமா ஆசையே வரக்கூடாது. சினிமாவ நெனச்சே பார்க்கக் கூடாது’ என்றார்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது பல முறை பயங்கரமா உதை வாங்கினேன். ஆனால், சினிமா கனவை ஒருபோதும் விடவில்லை.  பிறகு  அந்த இயக்குநரிடமே வேலை பார்த்தேன். அவர் என்னை விடவேயில்லை. என்னை உதைத்த  அந்த நடிகர் இன்னும் இருக்கிறார்.  இப்போதும் என்னைப் பார்த்தால் மன்னிப்புக் கேட்பார். அன்றைக்கு உதைச்ச அந்த உதையிலதான் இன்றைக்கு  இங்கே வந்து விழுந்திருக்கிறேன். இப்படி பல கட்டங்களைக் கடந்து கடந்துதான் இப்போ நடிகராக, இயக்குநராக நின்று கொண்டு இருக்கிறேன்.  நேர்மையும், உழைப்பையும் நம்பி மட்டுமே பயணத்திருக்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசினார்.

Related Posts