” சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” : ‘சீசா’ தயாரிப்பாளர்

” சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” : ‘சீசா’ தயாரிப்பாளர்

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன் பேசுகையில், “நான் சினிமா துறைக்கு புதியவன். எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். 12ம் வகுப்பு படிக்கும் வரை மொத்தமாக நான்கு திரைப்படங்கள் தான் பார்த்திருக்கிறேன். கல்லூரி சென்ற போது தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. என் கேரில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள், காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்றால் இரவு 12 மணி வரை பணியாற்றுவேன். இந்த படத்தின் கதை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்திலும் என் பங்களிப்பு இருக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சினிமா வேலையை பார்க்கிறேன். ஜனவரி 3 எப்போது வரும் என்று என் மனைவி எதிர்பார்க்கிறார், அப்போதாவது நான் பழையபடி இருப்பேன் என்பதால் தான்.

நீங்கள் நினைப்பது போல் சினிமா சாதாரணமான வேலை கிடையாது. கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார்கள், 6 மணிக்கு வண்டி பிடித்து படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். லைட் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் மிக கடுமையாக உழைக்கிறார்கள். இவர்கள் மனிதர்களா மிஷன்களா என்று தெரியாத அளவுக்கு மிக கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனால், நமக்கு இந்த கஷ்ட்டங்கள் எதுவுமே தெரியவில்லை. சினிமா என்றால் ஜாலி, ஒரே கூத்து கும்பாளமாக இருக்கும் என்று நினைக்கிறோம். கதை விவாதம் எடுத்துக் கொண்டால் கூட செத்து சுண்ணாம்பாகி விடுகிறோம். ஒரு படம் எடுக்கவே எனக்கு இப்படி இருக்கிறதே, மேடையில் இருப்பவர்கள் இத்தனை படங்களை எப்படி தான் எடுத்தார்களோ.

இயக்குநர் குணா குடிபோதைக்கு அடிமையாகி என்னிடம் வந்தார். அவர் யார் சொல்வதையும் கேட்காத ஒரு நிலையில் இருந்தார். 8 வயதில் ஆர்ம்பித்த சினிமா ஆசையால் அவர் பல தோல்விகளை சந்தித்து, எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். அவர் முதல் முறையாக மற்றவர் சொல்வதை கேட்டது என்னிடம் தான். அப்போது என்னிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன், என்று சொன்னவர். இதை இந்த அறையில் மட்டும் செய்யாமல் அனைவரும் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்காக என்னை வைத்து ஒரு வீடியோ எடுத்தார். அந்த வீடியோவுக்காக லொக்கேஷன், எனக்கு மேக்கப் என்று என்ன என்னவோ செய்து எடுத்தார். அந்த வீடியோவை பார்த்து நான் பிரமித்து விட்டேன், அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்த வீடியோ தான் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு ஒரு குறும்படம் எடுத்தோம், அனைத்தையும் மென்மையாக சொல்லக்கூடியவர். பிறகு படம் எடுக்கலாம் என்று சொல்லி, என்னிடம் தொடர்பில் இருந்தார். படம் தொடங்கலாம் என்று நான் சொன்ன பிறகு பதற்றமடைந்து விட்டார், அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. உடனே அவரை அழைத்து, எந்த காலத்திலும் என் காசை ஏமாற்றி விட்டதாக சொல்ல மாட்டேன். படம் ஜெயிக்க வில்லை என்றால் நமக்கு அதிஷ்ட்டம் இல்லை என்று நினைத்துக் கொள்வோம். தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை, அதனால் எந்தவித பதற்றமும் இன்றி இந்த படத்தை பண்ணுங்க, என்று சொன்னேன். எனக்கு செலவு வைக்க கூடாது என்று கடந்த மூன்று மாதங்களாக இட்லியும், தயிர் சாதமும் தான் சாப்பிடுகிறார், நானும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தயாரிப்பாளருக்கு செலவு வைக்க கூடாது என்று இப்படி செய்கிறார். நட்டி சாரை இயக்க வேண்டும் என்பது அவரது ஆசை, ஆனால் அவர் ஒகே சொன்னவுடன் பதற்றமடைந்து விட்டார். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அந்த நிலையிலேயே படம் எடுத்தார். குணா எப்படிப்பட்டவர் என்றால் சினிமாவுக்காக சாக கூடியவர். ஐந்து பைசா கூட எதிர்ப்பார்க்காமல் சினிமாவுக்காக வாழும் ஒரு நபர் அவர். நானும் இந்த சமூகத்தில் இருந்து தான் முன்னேறியிருக்கிறேன். அப்படிப்பட்ட சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதால் தான் நான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். நாங்கள் இணைந்து சிறிய வீடு கட்டியிருக்கிறோம், அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேடுக்கொள்கிறேன்.

நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நட்டி சார் மிக சிறந்த மனிதர். அவர் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். கேரவேன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை, ரோட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அவர் ஒரு தயாரிப்பாளரின் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். நிஷாந்த், பாடினி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளரை கசக்கி பிழிச்சி காயப்போட்டிருக்கிறேன். என் இசையமைப்பாளர் திறமையானவர், ஆனால் நாம் கேட்கும் போது பாடல்கள் கொடுக்க மாட்டார். தீபாவளிக்கு பேண்ட் கேட்டால் பொங்கலுக்கு தான் கொடுப்பார், அது ஒன்று தான் அவரது பிரச்சனை. மற்றபடி சிறந்த இசையமைப்பாளர் அவர், எம்.எஸ்.வி உடன் அவரை ஒப்பிடலாம் அந்த அளவுக்கு சிறந்த இசையமைப்பாளர். இவர்களுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுவேன். ஆறு கதைகள் வைத்திருக்கிறேன், அதில் ஒன்றில் மீண்டும் நட்டி சார் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில், வெற்றி தோல்வியை பார்த்து நானும், இயக்குநரும் பயப்பட போவதில்லை. நிச்சயம் தொடர்ந்து படம் பண்ணுவோம், நன்றி.” என்றார்.

Related Posts