“விபூதி – ராமாயணம் – ஹிஜாப் – பிராமணர்!”: ரஹ்மானின் யாசக முகம்!
ராமாயண புராணம் பல முறை பல மொழிகளில் திரைப்படமாக வந்திருக்கிறது. தற்போது இந்தியில் நான்காயிரம் கோடி ரூபாய் (!) செலவில் புதிதாக, ராமாயணம் படம் உருவாகிறது. இதற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், ““நான் ஒரு இஸ்லாமியர். ஹான்ஸ் ஜிம்மர் ஒரு யூதர். ‘ராமாயணம்’ இந்து மதம் சார்ந்தது. இதுகுறித்து பலர் கேள்வியெழுப்பலாம். நான் பிராமண பள்ளியில் படித்தவன். எனக்கு ‘ராமாயணம்’ கதை பரிச்சயமானதுதான்.
லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை அது. நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், யாசகர் என யாரிடம் இருந்து அறிவை பெற்றாலும், அது விலைமதிப்பற்றதுதான் என தீர்க்கத்தரிசி ஒருவர் கூறியுள்ளார். அதற்கு வெட்வெட்கப்பட வேண்டியதில்லை. குறுகிய மனப்பான்மையில் இருந்து நாம் விடுபட வேண்டும். அப்போதுதான் பிரகாசிக்க முடியும்’’ என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“அட… என்னவொரு பரந்த மனப்பான்மை” என்று தோன்றலாம்.
இதே போல இன்னொரு சம்பவத்தின் போதும் புல்லரிக்கவைத்தார்.
019-ஆம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் 10-ஆம் ஆண்டு விழா நடந்தது. அப்போது அவரது மகள், கதீஜா ரஹ்மான் ஹிஜாப் அணிந்து மேடையில் தோன்றினார்.
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் உள்ளிட்ட சிலர், “ஒரு முற்போக்கான கலைஞரின் மகள் இப்படி ஹிஜாப் அணிவது ஒடுக்குமுறையாகத் தெரிகிறது” என்று விமர்சனம் செய்தனர்.
உடனே ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மனைவி மற்றும் இரு மகள்கள் ஒரு நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் ஒரு மகள் ஹிஜாப் அணிந்திருக்க, மற்றொரு மகள் அணியாமல் இருந்தார்.
இதன் மூலம், ஆடை அணிவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதையும், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதோடு , ‘#FreedomToChoose’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிந்தார்.
“அட.. மகளாக இருந்தாலும் அவரது தனிப்பட்ட விருப்பத்தை மதிக்கிறாரே” என்று பலர் நெகிழ்ந்தனர். (ரஹ்மான் தனுத மனைவியை பிரிந்துவிட்டதால், அவரது படத்தை தவிர்த்து இருக்கிறேன்.)
ஆனால் அதற்கு பல காலம் முன்பே அவரது, “பரந்த மனதை” கவிஞர் பிறைசூடன் அம்பலப்படுத்தி இருந்தார்.
பிறைசூடன் எப்போதும் நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் அணிந்திருப்பார். அவர் ரஹ்மானின் வீட்டிற்குச் சென்றபோது, அவரது தாயார் கரீமா பேகம், “எங்கள் வீட்டிற்கு வரும்போது மட்டும் நெற்றியில் உள்ள விபூதி, குங்குமத்தை நீக்கிவிட்டு வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிறைசூடன், “இது எனது அடையாளம், என்னால் இதை மாற்றிக்கொள்ள முடியாது” என்று கூறி அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.
இதற்கும், “ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் தானே அப்படி கூறினார்” என முட்டு கொடுக்கலாம்.
ஆனால் அதன் பிறகு பிறைசூடனை பாடல் எழுத அழைக்கவில்லை ரஹ்மான். இத்தனைக்கும் ரஹ்மான் திரைத்துறைக்கு வர தயங்கியபோது உற்சாகப்படுத்தி வரவைத்தவர் பிறைசூடன்.
இதை பிறைசூடன் வெளிப்படையாக பேசிய பிறகும் ரஹ்மான் பதில் ஏதும் சொல்லவே இல்லை.
இன்னொரு விசயத்துக்கு வருவோம்..
ராமாயணம் படம் குறித்த பேட்டியில் ரஹ்மான், “எனக்கு ‘ராமாயணம்’ கதை பரிச்சயமானதுதான்” என்று சொல்லி, அதற்குக் காரணமாக, “நான் பிராமண பள்ளியில் படித்தவன். ” என்று பெருமையாகக் கூறி இருக்கிறார்.
அந்த பள்ளி, சென்னை பத்மா சேசாத்ரி பள்ளி. இங்கு அவர் படிக்கும்போது, கட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்டதையும், “பிச்சை எடு” என பள்ளி நிர்வாகத்தினர் கூறியதையும் இவரே பேட்டிகளில் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்.
அந்தப் பள்ளியைத்தான் இப்போது புகழ்கிறார்!
அதைவிட இன்னொரு முக்கிய விசயம்..
“ராமாயணம் என்பது லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை. யாரிடம் இருந்து அறிவை பெற்றாலும், அது விலைமதிப்பற்றதுதான். குறுகிய மனப்பான்மையில் இருந்து நாம் விடுபட வேண்டும்” என்றும் பேசி இருக்கிறார்.
வால்மீகி ராமாயணம்தான் மூலம். அதை கவனித்துப் படித்தால், அது சொல்லும் லட்சியம், ஒழுக்கம் எல்லாம் சமூகத்துக்கு எவ்வளவு ஆபத்தானது – அபத்தமானது என்பது விளங்கும்.
“பிராமண” பள்ளியில் படித்ததை பெருமையாக ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பேசி இருப்பதால், அது குறித்து ராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பதை மட்டும் பார்ப்போம்..
பார்ப்பனர் ஒருவரின் மகன் – சிறுவன் – இறந்துவிட்டான். நாரதர், “நாட்டில் ஏதோ தவறாக நடக்கிறது… அதன் விளைவே இது” என பதைபதைக்கிறார். பிறகு ஆராய்ந்து (!) “சம்பூகன் என்கிற சூத்திரன் தர்மத்தை (!) மீறி தவம் இருக்கிறான். அது மிகக் கெடுதலான விசயம். உடனே அவனை கொல்ல வேண்டும்” என ராமரிடம் சொல்கிறார்.
ராமரும் சம்பூகனை கொல்கிறார். 
சம்பூகன் செய்த ஒரே தவறு (!)… பிராமண – பார்ப்பனர்கள் – மட்டும் செய்ய வேண்டிய தவத்தை சூத்திரனான அவன் செய்ததுதான்!
இப்படி வர்ண – சாதிக் கொடுமைகளைத்தான் ராமாயணம் சொல்லித் தருகிறது. இதைத்தான், “லட்சியம், ஒழுக்கம்” என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதற்கு பதிலாக, “திரைப்படங்களுக்கு இசை அமைப்பது எனது தொழில். அதைச் செய்கிறேன்” என சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
ஆனால் எத்தனை மாய்மாலங்கள்!
“திருநீறு பூசாதே” என தாயார் சொல்வது, அதை ஏற்று குறிப்பிட்ட கவிஞருக்கு வாய்ப்பு மறுத்தது… திரைப்பட பூஜைகள் பெரும்பாலும் இந்து முறைப்படி நடக்கும் என்பதால் தவிர்ப்பது..தனது ஸ்டுடியோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய சடங்குகளை மட்டும் செய்வது… இதுதான் ஏ.ஆர்.ரஹ்மான்!
“இவை எல்லாம் அவரது உரிமை” என்றும் சிலர் சொல்லக்கூடும்.
அப்படியே இருக்கட்டும்.
ஆனால் ராமாயண ஆபத்து பற்றி அறியாமலேயே புகழ்ந்து, மக்களிடம் அதை உயர்த்தி தவறான எண்ணத்தை விதைக்க முயற்சிப்பது ஏன்..?
அடுத்தவர் விபூதி பூசுவதை ஏற்காத மனம், ராமாயணத்தை புகழ்வது ஏன்… இரண்டுமே தவறுதானே!
பலவருடங்களுக்கு முன், பிச்சைக்காரர்களைப் பற்றி – அவர்களுடனே பல நாட்கள் சுற்றி, பேசி, பழகி – ஒரு கட்டுரை எழுதினேன். குமுதம் வார இதழில் அட்டைப்படக் கட்டுரையாக அது வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அந்த கட்டுரைக்காக பிச்சைக்காரர்களுடன் அலைந்து பழகியோது பல ஆச்சரியமான விசயங்களை தெரிந்துகொண்டேன்.
அதில் ஒன்று…
வியாழக் கிழமை காவி உடுத்தி ராகவேந்திரர் கோயிலில் பிச்சை எடுக்கும் அதே நேபர், வெள்ளிக்கிழமை குல்லா போட்டு மசூதி வாயிலில் பிச்சை எடுப்பார். அவரே ஞாயிற்றுக் கிழமை மஞ்சள் ஆடை உடுத்தி அம்மன் கோயிலில் பிச்சை எடுப்பார்.
நோக்கம் பிச்சை எடுப்பது மட்டுமே!
இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.. பணம், புகழ் படைத்தவர்கள் உட்பட!
ஆம்.. மனிதர்களின் நோக்கம்.. பிழைப்பு மட்டுமே!
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் விதிவிலக்கல்ல!
இதை அனைவரும் உணர்ந்து, மத வெறுப்பில் இருந்து மீண்டால் சரி!
– டி.வி.சோமு

