எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு!

எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு!

ஜனவரி 17 : எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு கட்டுரை 2

1977ம் ஆண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர்., தமிழ் மொழிக்கு முக்கியத்தும் அளிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்தார்.

@ பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்

தந்தை பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தத்தை (உதாரணமாக: ணா, றா, னா, லை, ணை) துணிச்சலாக அரசு உத்தரவாக பிறப்பித்தார்.

இதன் மூலம் தமிழ் தட்டச்சு மற்றும் அச்சுப் பணி எளிமையானது. இன்று நாம் பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துமுறைக்கு எம்.ஜி.ஆரே அடித்தளம் அமைத்தார். முன்னதாக நீண்டகாலம் ஆட்சியில் இருந்த கருணாநிதி செய்யாத ஒரு மிகப்பெரிய புரட்சி இது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தியதால், அரசு கோப்புகள் மற்றும் அச்சுப் பணிகளில் தமிழ் மிக எளிதாகப் புகுந்தது.

@ ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு

மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்து தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். இந்த மாநாட்டின் நினைவாகவே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார்.

@ மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம்

மதுரையில் தமிழுக்கென ஒரு தனி அமைப்பான ‘உலகத் தமிழ்ச் சங்கம்’ அமையக் காரணமாக இருந்தார். அதன் கட்டுமானப் பணிகளுக்கு அவர் காலத்திலேயே வித்திடப்பட்டது. 

@ தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் வந்து ஆராய்ச்சி செய்வதற்காக, ஒரு பிரம்மாண்டமான பல்கலைக்கழகத்தை தஞ்சாவூரில் 1,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கினார்.

இதன் பிரதான கட்டிடம் “தமிழ்” என்ற எழுத்தின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருப்பது எம்.ஜி.ஆரின் ரசனையையும் தமிழ்ப்பற்றையும் காட்டும்.

@ அரசு நிர்வாகத்தில் 100% தமிழ்!

1981 உலகத் தமிழ் மாநாட்டின் போது, அரசு நிர்வாகத்தில் தமிழ் மொழி 100% பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று ஒரு பெரிய பிரச்சாரத்தையே முன்னெடுத்தார். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள்தங்களது ஆய்வு அறிக்கைகளைத் தமிழில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

அப்போது இருந்த சில உயர் அதிகாரிகள்) “தமிழில் சரியான கலைச்சொற்கள் இல்லை” என்று காரணம் சொன்னபோது, எம்.ஜி.ஆர் அவர்கள், “எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்துவிட்டோமே.. இப்போது தமிழ் இன்னும் எளிமையாகிவிட்டது, இனி உங்களுக்கு என்ன தடை?” என்று கேட்டு அவர்களைத் தமிழ் வழியில் நிர்வாகம் செய்யத் தூண்டினார்.

தமிழில் கோப்புகளை எழுதாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், சிறப்பாக எழுதுபவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தீவிரமானது.

தமிழ்நாடு அரசு முத்திரை: அரசு முத்திரையில் (கோபுரம் சின்னம்) ‘தமிழ்நாடு அரசு’ என்கிற சொற்கள் அனைத்து நிலைகளிலும் (அரசுப் பொருட்கள் முதல் கடிதங்கள் வரை) மிகத் தெளிவாகவும் முதன்மையாகவும் இருப்பதை உறுதி செய்தார்.

நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதிகாரிகளுக்குத் தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் நிர்வாகச் சொற்களைக் கற்றுக்கொடுக்க சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

@ பாரதியார் நூற்றாண்டு விழா 

மகாக்கவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்.

பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்ததோடு, பாரதியார் பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார்.

@  நவோதயா மறுப்பு

1986-ல் ராஜீவ் காந்தி அரசு ‘புதிய கல்வி கொள்கை’யைக் கொண்டு வந்தபோது, அதில் ‘நவோதயா’ பள்ளிகள் (ஜவஹர் நவோதயா வித்யாலயா) என்ற திட்டம் இருந்தது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்குவதுதான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

சமூக நீதி மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி மீது மிகுந்த அக்கறை கொண்ட எம்.ஜி.ஆர், ஆரம்பத்தில் இத்திட்டத்தின் “கல்வி சார்ந்த நோக்கத்தை” வரவேற்றார். ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்குமே என்ற நோக்கில் அவர் இதை ஒரு வாய்ப்பாகப் பார்த்தார்.

ஆனால், நவோதயா பள்ளிகளின் பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் வந்தபோதுதான் அதில் இருந்த சிக்கல் புரிந்தது.

நவோதயா பள்ளிகளில் இந்தி ஒரு கட்டாயப் பாடமாக இருக்கும் என்பது தெரியவந்தது.

தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே ‘தமிழ்-ஆங்கிலம்’ என்ற இருமொழிக் கொள்கை மிக உறுதியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. நவோதயா பள்ளிகள் உள்ளே வந்தால் அது சிதையும் என்பதால், எம்.ஜி.ஆர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்:

1986 நவம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் “மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை நிறுத்த வேண்டும்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் திறக்க மத்திய அரசு அனுமதி கேட்டபோது, “மூன்றாவது மொழியாக இந்தியைத் திணிக்காத பட்சத்தில் மட்டுமே அனுமதிப்போம்” என்ற நிபந்தனையை விதித்தார். மத்திய அரசு அதற்கு உடன்படாததால், எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு நவோதயா பள்ளியைக் கூடத் தமிழகத்தில் திறக்க அனுமதிக்கவில்லை.

இப்படி தமிழுக்காக எம்.ஜி.ஆர். செய்த தொண்டுகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்!

– யாழினி சோமு

Related Posts