திரை விமர்சனம்: ஜோஷ்வா இமை போல் காக்க
சர்வதேச அளவில் கூலிக்குக் கொலை செய்பவர் வருண். அப்படியான ஒரு அஸைண்மெண்ட்டுக்காக வருபவர், அங்கே ஹீரோயின் ராஹேவை நோக்குகிறார். ராஹேவும் நோக்க… அடுத்த சீனிலேயே, தான் ஒரு கூலிக்கொலையாளி என்பதைச் சொல்லி விடுகிறார்.
அமெரிக்காவில் படித்து வக்கீலாக இருக்கும் நாயகி ராஹேவுக்கு இது பிடிக்கவில்லை.
கொலையாளியைக் காதலிப்பதா என்ற எண்ணத்தில் வருணை விட்டு ராஹே விலகி அமெரிக்கா சென்றுவிடுகிறார்.
இயக்குநர் கவுதம் மேனன் ஆயிற்றே… அந்த காதல் அப்படி சாதாரணமாக இருந்துவிடுமா..அமெரிக்காவில் புகழ்பெற்ற போதை மருந்து கடத்தல் மன்னனை போலீசார் கைது செய்கின்றனர். அந்த வழக்கில் போ.க.மன்னனை எதிர்த்து அரசு சார்பாக வாதாட தயாராகிறார் ராஹே. ஆகவே அவரை கொலை செய்ய, அதி பயங்கர கூலிப்படையினரை அனுப்புகிறார் அந்த போ.க.மன்னன்.
அவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மெய்க்காவலர்களை நியமிக்க திட்டமிடுகிறார். அதே நேரத்தில், ராஹேவை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து கூலிக் கொலையாளி வேலையை விட்டுவிடுகிறார் ஹீரோ வருண். பிறகு, விஐபிகளின் பாதுகாவலராக பணி மாற்றம் செய்துகொள்கிறார்.
ஆம்… ராஹேவை பாதுகாக்கும் பொருப்பு வருணுக்கு வாய்க்கிறது.
அதன் பிறகு நடக்கும் அதிரடிகள்தான் கதை.
மெய்க்காப்பாளர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான உருவரம் நாயகன் வருணுக்கு. அதே போல அடிதடி காட்சிகளில் தூள் பறத்துகிறார். நிச்சயமாக ஒரு ஆக்சன் ஹீரோவாக பரிமளிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் டிரெய்னிங்(!) எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹீரோயின் ராஹேவுக்கும் இது முதல் படம்தான். ஆனால், சிறப்பாக நடித்து உள்ளார். அதுவும் கிளைமாக்ஸில் அவரது நடிப்பு தூள்.
லேடி டான் வேடத்தில் வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இடைவேளைக்குப் பிறகு வந்து கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறார்கள் கிருஷ்ணா, மன்சூர் அலிகான் ஆகியோர்.ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் அனைத்துமே ஆங்கில படம் அளவுக்கு அசத்துகின்றன. அதே போல சண்டைக் காட்சிகளும் அதிரடிதான்!
குறிப்பாக கிளைமாக்சில் பத்துக்கு பன்னிரெண்டு அறையில் 12 பேரை வருண் அடித்து துவம்சம் செய்யும் சண்டையும் காட்சி மிரள வைக்கிறது.
மொத்தத்தில் மிரண்டு ரசிக்கவைக்கிறது ஜோஷ்வா!