விமர்சனம்:  சித்தா

விமர்சனம்:  சித்தா

மதுரையை சுற்றியுள்ள சிறுநகரங்களில் ஒன்றில் வசிக்கிறார் இளைஞர் ஈஸ்வரன் . சிறு வயதிலேயே அண்ணனை இழந்ததால் குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்று அண்ணியையும், அவரது மகள் சுந்தரியையும் பார்த்துக் கொள்கிறார். தான் வேலை செய்யும் அரசு அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளராக வரும் தன் பள்ளிகால காதலியான சக்தியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கிறார்.

இந்த நிலையி் அவருக்கு, அண்ணன் மகளின் பள்ளி தோழி பொன்னியின் வழியாக பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.

சிறுமியான பொன்னியை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட, சிறுவயது முதலே அவரிடம் பாசமாக இருக்கும் சித்தார்த்தின் மீது அந்தப் பழி விழுகிறது. அந்தப் பழியிலிருந்து மீண்டும் வரும் நேரத்தில், தன் அண்ணன் மகள் சுந்தரிக்கு நடக்கும் சில துர்நிகழ்வுகள் அவரை அதிரச்  செய்கின்றன. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே கதை.
நாயகனாக சித்தார்த், நடுத்தர வர்க்க இளைஞனாக நடித்துள்ளார். தன் மீது விழுந்த பழியைத் தொடர்ந்து கழிவறையில் கதறுவது, அண்ணன் மகளின் தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ரோட்டில் அழுவது என நெகிழ வைக்கிறார்.

குழந்தை நட்சத்திரங்களான சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் அத்தனை அற்புதமாக நடித்து இருக்கின்றனர். சிறுவயதில் நடக்கும் பாலியல் அத்துமீறல் காரணமாக, குழந்தைத்தன்மையை தொலைக்கும் பிஞ்சுகளை கண்முன் நிறுத்தி கலங்க வைக்கின்றனர்.

சித்தார்த்தின் அண்ணியாக வரும் அஞ்சலி நாயர், காதலியாக வரும் நிமிஷா சஜயன் ஆகியோரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர். அதே போல சிறு வேடங்களில் வருவோரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

விஷால் சந்திரசேகரின் இசையும், பாலாஜியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.படம் ஆரம்பிக்கும்போதே,  ‘ஃபீல் குட் மூவி’ என்கிற நேசம் மனதுக்குள் வந்துவிடுகிறது. அண்ணன் மகள் சுந்தரி மீது சித்தார்த் வைத்திருக்கும் பாசம்,  சித்தார்த், நண்பர்கள் – சித்தார் இடையிலான உறவுகள் என அனைத்துமே இயல்பான காட்சிகளில் வடிக்கப்பட்டு இருக்கின்றன.

பிறகு கதை வேறொரு தளத்தில் தடதடக்கிறது. சிறுமி பொன்னிக்கு ஏற்படும் கொடூரத்துக்குப் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளுடன் நகர்கின்றன.

பல அடுக்குகளைக் கொண்ட திரைக்கதையை எந்தவித ரசிகர்களுக்கு குழப்பமின்றி சொல்லி இருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் .

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.